வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை ஓட்டி திரளான பக்தர்கள் குவிந்தனர். மயிலிறகு அலங்காரத்தில் எழுந்தருளினார் வள்ளி தெய்வானை சமேதமாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லக்கோட்டை கிராமத்தில் புகழ்பெற்ற ஶ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரிநாத சுவாமிகளால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற இத்தலம் பகீரத மன்னனுக்கு இழந்த அரசாட்சியை மீண்டும் வழங்கிய தலமாகவும், இந்திரன் இந்திராணியை மணம்புரிய வரம்பெற்ற தலமாகவும் உள்ளதால் இழந்த பதவிகளை மீண்டும் பெறும் தலமாகவும், திருமண பாக்கியம் பெறும் தலமாகவும் இத்திருக்கோயில் உள்ளது.
அதனால் இந்த திருக்கோயிலுக்கு வாரந்தோறும் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாதந்தோறும் கிருத்திகை நாள்களிலும் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து வேண்டுகின்றனர்.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கும் முருகன் வழிபாட்டிற்கும் உகந்த மாதமாகும். ஆடி கிருத்திகை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலுக்கு திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடைபெற்றது.
பின்னர் மூலவர் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு மூலவர் காட்சியருளினார். சஷ்டி மண்டபத்தில் உற்சவர் மயிலிறகு தோகை சேவையில் அருள்பாலித்தார்.
ஆடி கிருத்திகையொட்டி ஏராளமான பக்தர்கள் செவ்வாடை, பச்சையாடை அணிந்து வந்து அலகு குத்தி, காவடி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தினர். சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து வரிசையில் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைத் திருக்கோயில் நிர்வாகம் செய்திருந்தது.
பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் கதம்ப சாதம், புளியோதரை பிரசாதங்களை நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவராஜ் மற்றும் அறங்காவலர்கள் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.