மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
நாயன்மார்கள் அறுபத்து மூவரில் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையாருக்கென காரைக்கால் நகரப் பகுதியில் தனி கோயில் உள்ளது. அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்காலில் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.
திருவிழா புதன்கிழமை இரவு காரைக்கால் ஆற்றங்கரை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்புடன் தொடங்கியது. சிறப்பு வாத்தியங்கள், குதிரை வாகனம் பூட்டிய மின் அலங்கார இந்திர விமானத்தில் பரமதத்தர் புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளினார். 2-ஆம் நாளான வியாழக்கிழமை அம்மையாரின் திருக்கல்யாண உற்சவம் அம்மையார் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
திருக்கல்யாணத்துக்கு முன்னதாக திருக்குளக்கரைக்கு புனிதவதியார் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. குதிரை வாகனத்தில் வீதியுலா புறப்பட்ட பரமதத்தர் அம்மையார் கோயிலுக்கு எழுந்தருளினார்.
மேடையில் காரைக்கால் அம்மையார் - பரமத்ததரை அருகருகே வீற்றிருக்கச் செய்து திருக்கல்யாணத்துக்கான ஹோமம் 10 மணியளவில் தொடங்கியது.
திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஹோம நிறைவில், திருமாங்கல்யத்துக்கு சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியர்கள் மேற்கொண்டனர். கன்னிகாதானம் செய்து, தொடர்ந்து பரமதத்தர் சார்பில் சிவாச்சாரியர் அம்மையாருக்கு 11 மணியளவில் திருமாங்கல்யதாரணம் செய்தார். அப்போது பக்தர்கள் அட்சதையை அவரவர் தலை மீது தூவிக்கொண்டு அம்மையாரை வழிபட்டனர். திருமாங்கல்யதாரணம் முடிந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 16 வகையான சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன.
புதுவை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்ட ஆட்சியர் து.மணிகண்டன், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) கே.அருணகிரிநாதன் மற்றும் கைலாசநாதர் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆர்.காளிதாசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அம்மையார் திருக்கல்யாணத்தைத் தரிசிப்பது திருமணமாகாதோர், சுமங்கலிப் பெண்களுக்கு மிகுந்த விசேஷமெனக் கருதப்படுவதால், மண்டபம் உள்ளேயும், வெளியையும் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.