டேஹ்ராடூன்: குளிர்காலத்தை முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் வரும் நவம்பர் 25ம் தேதி மூடப்படும் என்று ஜோதிட நிபுணர்கள் கணித்து தேதியை அறிவித்துள்ளனர்.
சார்தாம் என்று அழைக்கப்படும் நான்கு புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், கடல் மட்டத்திலிருந்து 10,170 அடி உயரத்திலும் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோயில், ஆண்டுதோறும் குளிர்காலத்தில் மூடப்படுவது வழக்கம்.
குளிர் காலத்தில் ஏற்படும் பனிப்பொழிவு காரணமாக இந்த கோயில் முழுவதும் பனியால் மூடப்படும் என்பதால், இந்த வழக்கம் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் கோயில் நடை மூடப்படும் என்றாலும், சாமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில் நடை எந்த தேதியில், எத்தனை மணிக்கு மூடப்பட வேண்டும் என்பதை இன்று விஜயதசமி நாளில் நிபுணத்துவம் பெற்ற ஜோதிடர்கள் அமர்ந்து நேரத்தைக் கணித்து வழங்கியருக்கிறார்கள்.
அவர்களின் கூற்றுப்படி, வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி பிற்பகல் 2.56 மணியளவில், சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் செய்யப்பட்ட பிறகு, கோயில் நடை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயில் நடை சாத்தப்படும் நிகழ்ச்சி சுமார் 5 நாள்களுக்கு முன்பாகவே தொடங்கி, ஒவ்வொரு சன்னிதானத்துக்கும் தனித்தனி பூஜைகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு நடையாக ஒவ்வொரு நாள் சாத்தப்படுவது வழக்கம்.
உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் பனிக்காலம் காரணமாக மூடப்பட்டு, சரியாக ஆறு மாதங்களுக்குப் பின்னா் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டு மேள தாளங்களுடன் திறக்கப்படுவது வழக்கம்.
இதையும் படிக்க... இப்படியொரு மேக்கிங்கா? பாராட்டுகளைப் பெறும் காந்தாரா சாப்டர் - 1!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.