மாதப் பலன்கள் 
செய்திகள்

செப்டம்பர் மாத பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிகளுக்குமான செப்டம்பர் மாத பலன்களை படித்து மகிழுங்கள்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் செப்டம்பர் மாதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் மேஷ ராசியினரே இந்த மாதம் எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

அஸ்வினி:

ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.

பரணி:

தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும்.சக தொழிலாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.

கார்த்திகை 1ம் பாதம்:

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

 பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

எந்த ஒரு காரியத்திலும் அனுபவ அறிவைக் கொண்டு திறம்பட செயலாற்றும் ரிஷப ராசியினரே இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும் கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 பாதம்:

தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

ரோகிணி:

எடுத்த காரியத்தை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதம்:

தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும்.

பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எதையும் ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் சாதகபாதகங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் மிதுன ராசியினரே இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:

குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

திருவாதிரை:

உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும். அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதம்:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

எந்த ஒரு செயலையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து எதிரிகளை அசத்தும் கடக ராசியினரே இந்த மாதம் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.

மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

புனர் பூசம் 4ம் பாதம்:

வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.

பூசம்:

குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.

ஆயில்யம்:

நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட மனக்குழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

எதிரியின் நிலை அறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். ராசியைப் பார்க்கும் சனியின் பார்வையால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை வரலாம்.

தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபம் தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதும் நன்மை தரும்.

பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.

மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

மகம்:

சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும்.

பூரம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். பெண்கள் அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்.

உத்திரம் 1ம் பாதம்:

சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

மிக எளிதில் எதிலும் உயர்ந்த நிலைக்கு வரக்கூடிய திறமை மிகுந்த கன்னி ராசியினரே இந்த மாதம் பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார் போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத்திறன் அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.

பெண்களுக்கு சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதம்:

தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும்.

அஸ்தம்:

கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது.

சித்திரை 1, 2, பாதம்:

திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

பரிகாரம்: பெருமாளை வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

சொந்த முயற்சியில் முன்னுக்கு வரக்கூடிய ஆற்றல் உடைய துலா ராசியினரே இந்த மாதம் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.

குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.

பெண்களுக்கு கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.

மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரி யமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதம்:

மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம்.

சுவாதி:

எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.

விசாகம் 1, 2, 3ம் பாதம்

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உழைப்பு, செயல்திறன், பேச்சு ஆகியவற்றில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் பலவகையான யோகம் வந்து சேரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.

மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்க ளில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

விசாகம் 4ம் பாதம்:

சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது. மாணவர்கள் எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.

அனுஷம்:

எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.

கேட்டை:

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பிறர் மதிக்கும்படி நடந்துகொள்ளும் தனுசு ராசியினரே நீங்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றும் திறமை பெற்றவர். இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்கும் முன் யோசிப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

மூலம்

தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பூராடம்:

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும். கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் எடுப்பீர்கள். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.

உத்திராடம் 1ம் பாதம்

தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சொந்த உழைப்பினால் உயரும் திறமை உடைய மகர ராசியினரே உங்களுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகள் வரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை.

பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.

திருவோணம்:

தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் கடுமையான உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

அவிட்டம் 1,2 பாதம்

எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எதிர்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் கும்ப ராசியினரே இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர் கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.

பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

அவிட்டம் 3, 4 பாதம்:

தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.

சதயம்:

வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.

பூரட்டாதி 1, 2, 3 பாதம்

அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப்பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அடுத்தவரை பயன்படுத்தி பல காரியங்களை சாதிக்கும் திறமை உடைய மீன ராசியினரே நீங்கள் பொது வாழ்க்கையில் புகழ்பெறுவீர்கள். இந்த மாதம் சுபச் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.

தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.

பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.

மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்:

எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.

உத்திரட்டாதி:

தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.

ரேவதி:

பெண்களுக்கு எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

ஓபிசி இடஒதுக்கீட்டை பாதிக்காமல் மராத்தா பிரிவினருக்கென இடஒதுக்கீடு: மகாராஷ்டிர அமைச்சர்

வண்ணக் கனவுகள்... சங்கவி!

மலர் சூடி... மானசா செளத்ரி!

ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த பெண் போலீஸ்! திடீரென வீட்டுக்குள் நுழைந்த கணவன்! அப்புறமென்ன..?

SCROLL FOR NEXT