தமிழகத்திலேயே ஒரே கல்லால் ஆன நடராஜர் சிலை உடைய ஸ்ரீ சிவகாமி சமேத நடராஜர் திருக்கோயிலில் பூரணகும்ப மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நாகலுத்து தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ சிவகாமி சமேத ஸ்ரீ நடராஜர் திருக்கோயிலில் தமிழகத்திலேயே ஒரே கல்லாலான நடராஜர் சிலை உள்ள திருக்கோயிலாகும். இந்த பழமையான திருக்கோயிலில் சிதிலமடைந்த பகுதிகள் முழுவதும் புறனமைப்பு செய்து ராஜகோபுரங்கள் புதிய விமானங்கள், கலசங்கள் அமைக்கப்பட்டுப் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று பூரண கும்ப மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த ஒரு வாரமாகக் கோயில் அருகாமையில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு கோ பூஜை, கஜ பூஜை எனப் பல வகையான பூஜை மற்றும் யாகங்கள் நடத்தி பல்வேறு நதிகள் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை அர்ச்சகர்கள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு ராஜகோபுரம், மூலவர் கோபுரம், சன்னதி கோபுரம் எனக் கோபுரங்களில் அமைக்கப்பட்ட கலசங்களில் புனித நீரை ஊற்றிச் சிவ மேள தாளங்கள் ஒலிக்கப் பூரண மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஒரே கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ள கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேகத்தைக் காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து புனித நீரைத் தெளித்துக் கொண்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.