தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 532

ஹரி கிருஷ்ணன்

அன்பர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.  முருகனுடைய அலங்கார வடிவத்தை வர்ணிக்கும் இன்றைய பாடலோடு புத்தாண்டை மங்கலமாகத் தொடங்குவோம்.  இதற்குத் ‘திருவலங்காரத் துதி’ என்று பெயர்.

இது திருக்குரங்காடுதுறை என்னும் தலத்துக்கான பாடல்.  இத்தலத்தைப் பற்றி உரையாசிரியர் குகத்திரு வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் தந்திருக்கும் குறிப்பில்: “வட குரங்காடுதுறை என்னும் தலம் கும்பகோணத்துக்கு அடுத்த ஐயம்பேட்டை ஸ்டேஷனிலிருந்து 4 மைல்.  வழியில் திருச்சக்கிராப்பள்ளி என்னும் ஸ்தலம் இருக்கிறது.  திருஞான சம்பந்த ஸ்வாமிகளுடைய பாடல் பெற்றது.  தென் குரங்காடுதுறை என்பது ஆடுதுறை.  ரெயில்வே ஸ்டேஷன், திருவிடைமருதூருக்குக் கிழக்கு இரண்டரை மைல்; திருஞான சம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது” என்கிறார்.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  வல்லொற்றும் மெல்லொற்றும் கலந்து அலங்கார களேபரமாக விளங்குவது.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் ஒற்றொழித்து நான்கு எழுத்துகளையும், மூன்றாவது எழுத்து மட்டும் நெடிலாகவும், கணக்கில் சேராத மூன்றாம் எழுத்து மெல்லொற்றாகவும் அமைந்தவை.  இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் ஒற்றுநீக்கி ஐந்து குற்றெழுத்துகளையும் கணக்கில் சேராத மூன்றாம், ஏழாம் எழுத்துகள் வல்லொற்றுகளாகவும் அமைந்திருப்பவை.

தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
தனந்தான தனத்தனனத்                   தனதான

அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
         கசைந்தாடு குழைக்கவசத்  -      திரடோளும்
      அலந்தாம மணித்திரளைப் புரண்டாட நிரைத்தகரத்
         தணிந்தாழி வனைக்கடகச்    -    சுடர்வேலுஞ்
சிலம்போடு மணிச்சுருதி சலங்கோசை மிகுத்ததிரச்
         சிவந்தேறி மணத்தமலர்ப்      -   புனைபாதந்
      திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
         தினந்தோறு நடிப்பதுமற்    -      புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யுழற்புகையிட்
         டிளந்தாது மலர்த்திருவைச்  -     சிறைமீளும்
      இளங்காள முகிற்கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
         திருங்கான நடக்குமவற்     -     கினியோனே
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
         கொடுந்தாரை வெயிற் கயிலைத் - தொடும்வீரா
      கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
         குரங்காடு துறைக்குமரப்     -     பெருமாளே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT