தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 897

ஹரி கிருஷ்ணன்

பதச் சேதம்

சொற் பொருள்

கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரோ சற்று அல ஆவி

 

போனார்: பிரிந்து போனவர்; கூடாரோ: திரும்பவந்து சேராரோ;

கோது ஆனேன் மாதா மாறு ஆனாள் கோளே கேள் மற்று இள வாடை

 

கோது ஆனேன்: சக்கையாகப் போனேன்; கோளே கேள்: சுற்றத்தார் கோள் மூட்டுகிறார்கள் (கேள்: சுற்றத்தார்); இளவாடை: தென்றல்;

ஈர் வாள் போலே மேலே வீசா ஏறா வேறிட்டு அது தீயின்

 

ஈர்வாள் போலே: அறுக்கின்ற வாளைப் போலே;

ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ

 

 

சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள் கூரும்

 

 

தோலா வேலா வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே

 

தோலா: தோற்காத; வீறு: மேம்பட்ட;

சேர்வாய் நீதி வானோர் வீரா சேரார் ஊரை சுடுவார் தம்

 

நீதீ: நீதி—நீட்டல் விகாரம்; சேரார்: பகைவர்களுடைய; ஊரை: திரிபுரங்களை;

சேயே வேளே பூவே கோவே தேவே தேவ பெருமாளே.

 

 

கூர்வாய் நாராய் வாராய் போனார் கூடாரே(ரோ)... கூர்மையான அலகை உடைய நாரையே! இங்கே வா! என்னைவிட்டுப் பிரிந்தவர் மீண்டும் வந்து என்னைச் சேர மாட்டாரா?

சற்று அல ஆவி கோது ஆனேன் மாதா மாறு ஆனாள்... கொஞ்சமாக இல்லை.  என்னுடைய உயிர் சக்கையாகவே போய்விட்டது.  என் தாயோ என்னோடு பகைகொண்டவளாக ஆனாள்.

கோளே கேள் மற்று இள வாடை ஈர் வாள் போலே மேலே வீசா... என்னுடைய உறவினர்கள் கோள்மூட்டுவதிலேயே ஈடுபட்டிருக்கிறார்கள்.  தென்றலோ அறுக்கின்ற வாளைப் போல என் மீது வீசி,

ஏறா வேறிட்டு அது தீயின்... எரிகின்ற நெருப்பைப் போல உடலைத் தீய்க்கிறது.

ஈயா வாழ்வோர் பேரே பாடா ஈடு ஏறாரில் கெடலாமோ... யாருக்கும் கொடுக்காமல் வாழ்கின்றவர்களுடைய புகழைப் பாடி ஈடேறாமல் தவிப்பர்களைப் போல நானும் தவிக்கலாமோ?

சூர் வாழாதே மாறாதே வாழ் சூழ் வானோர்கட்கு அருள் கூரும் தோலா வேலா... சூரன் வாழாதபடிக்குத் தங்களுடைய சுகவாழ்வைத் தேடுகின்ற தேவர்களுக்கு அருள்பாலிக்கின்றவனே!  தோல்வி அறியாத வேலா!

வீறு ஆரூர் வாழ் சோதீ பாகத்து உமை ஊடே சேர்வாய்... மேம்பட்டதான திருவாரூரில் வீற்றிருக்கின்ற சோதிமயமான சிவபெருமானுக்கும் அவருக்கு இடதுபாகத்தில் அமர்ந்துள்ள உமாதேவிக்கும் இடையே (சோமாஸ்கந்த மூர்த்தியாக) விளங்குபவனே!

நீதி வானோர் வீரா... நீதி நிறைந்தவனே! தேவர்களுடைய சேனைக்குத் தலைமை தாங்குகின்ற வீரனே!

சேரார் ஊரை சுடுவார் தம் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே... பகைவர்களுடைய ஊராகிய திரிபுரங்களை எரித்தவரான சிவபிரானுடைய மகனே! வேளே! பொலிவுள்ளவனே! தேவனே! தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

சூரன் வாழாதபடி தேவர்களுடைய நல்வாழ்வைப் பாதுகாத்து, தோல்வியே கண்டறியாத வேலனே! திருவாரூரில் சோதி வடிவாக விளங்குகின்ற சிவபெருமானுக்கும் அவருடைய இடதுபாகத்தில் உள்ள உமைக்கும் இடையில் சோமாஸ்கந்த மூர்த்தியாக விளங்குபவனே!  நீதிமானே!  பகைவர்களின் ஊரான திரிபுரங்களை எரித்த சிவபிரானின் மகனே! வேளே!  பொலிவுள்ளவனே!  தேவனே! தேவர்கள் பெருமாளே!

கூரிய அலகை உடைய நாரையே இங்கே வா.  என்னைவிட்டுப் பிரிந்து சென்றவர் திரும்பிவந்து என்னைச் சேர மாட்டாரோ.  என் உயிரோ சக்கையாகிவிட்டது.  தாயும் பகைமை பூண்டிருக்கிறாள்.  உறவினர்களோ கோள்மூட்டுகிறார்கள்; தென்றலோ என் மீது பட்டுத் தீயைப் போலச் சுடுகிறது.  அடுத்தவர்களுக்குக் கொடுக்காமல் வாழ்கின்றவர்களுடைய புகழைப் பாடி ஈடேறாது தவிப்பர்களைப் போல நானும் தவிக்கலாமோ?  (நான் தவிக்காதபடி என்னைக் காக்கவேண்டும் என்று அந்த வேலனிடம் நீபோய்ச் சொல்லவேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT