தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 731

ஹரி கிருஷ்ணன்

பதச் சேதம்

சொற் பொருள்

கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல் கற்று உளம் வேறு

 

கூசாதே: வெட்கப்படாமல்; பார் ஏசாதே: உலகம் பழித்திடாமல்; மால் கூறா: (உன்) பெருமையைக் கூறாத;

கோடாதே வேல் பாடாதே மால் கூர் கூதாள தொடை தோளில்

 

கோடாதே: கோணலாகமல் (கோணல் வழியிற் செல்லாமல்); மால்கூர்: ஆசை மிக; கூதாளத் தொடை: தூதுவளை மாலை;

வீசாதே பேர் பேசாதே சீர் வேத அதீத கழல் மீதே

 

வேதாதீத: வேதத்துக்கு எட்டாத;

வீழாதே போய் நாயேன் வாழ் நாள் வீணே போக தகுமோ தான்

 

 

நேசா வானோர் ஈசா வாமா நீபா கான புன மானை

 

வாமா: அழகனே; நீபா: கடப்ப (மாலையை) அணிந்தவனே; கான: காட்டின்; புனமான்: புனம் காத்த மான்—வள்ளி;

நேர்வாய் ஆர்வாய் சூர் வாய் சார்வாய் நீள் கார் சூழ் கற்பக சால

 

நேர்வாய்: சந்திப்பாய்; ஆர்வாய்: மகிழ்வாய்; சூர்வாய்: சூரன் இருந்த இடம் (மகேந்திர நகரம்); சார்வாய்: செல்வாய்; நீள்கார்: நீண்ட கருமேகம்; கற்பக சால: கற்பக (மரங்கள்) நிறைந்த;

தேச ஆதீனா தீனார் ஈசா சீர் ஆரூரில் பெரு வாழ்வே

 

தேசாதீனா: தேச (தேவலோகத்துக்கு) ஆதீனா—உரிமை படைத்தவனே; தீனார் ஈசா: தீனர்களின் ஈசனே;

சேயே வேளே பூவே கோவே தேவே தேவர் பெருமாளே.

 

சேயே: சிவந்த நிறத்தை உடையவனே;

கூசாதே பார் ஏசாதே மால் கூறா நூல்கற்று உளம்வேறு கோடாதே... நான் சற்றும் வெட்கப்படாமலும் உலகம் என்னைப் பழிக்காமலும் உன்னுடைய பெருமையைப் பேசாத வெற்று நூல்களைக் கற்று என் மனம் மாறுபாடுற்று நான் கோணலான வழியைத் தேடிச்செல்லாமல்;

வேல் பாடாதே மால் கூர் கூதாளத் தொடைதோளில் வீசாதே... உன்னுடைய வேலைப் போற்றிப் பாடாமலும்; ஆவல் மிகுந்து தூதுவளை மாலையை உன் தோளில் வீசாமலும்,

பேர் பேசாதே சீர் வேத அதீதக் கழல்மீதே வீழாதே... உன் புகழைப் பேசாமலும்; சிறப்புமிக்க வேதங்களுக்கும் எட்டாதனவாகியி உன் திருவடிகளின் மீது விழாமலும்;

போய் நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோதான்... நாயைப் போன்றவனான என்னுடைய வாழ்நாள் வீணாகப் போவது தகுமா? (வீணாகாமல் அருள்புரிய வேண்டும்.)

நேசா வானோர் ஈசா வாமா நீபா கானப் புனமானை நேர்வாய் ஆர்வாய்... நேசம் மிகுந்தவனே! தேவர்களின் தெய்வமே! அழகனே! கடப்பமாலையை அணிந்தவனே!  காட்டில் தினைப்புனம் காத்த மான்போன்ற வள்ளியைச் சந்தித்தவனே! மனம் மகிழ்ந்தவனே!

சூர்வாய் சார்வாய் நீள்கார் சூழ்கற்பகசாலத் தேச ஆதீனா... சூரன் இருந்த மகேந்திரபுரியைச் சென்றடைந்தவனே! கரிய மழைமேகங்கள் சூழ்ந்திருக்கும் கற்பக மரங்கள் நிறைந்திருக்கின்ற தேவலோகத்துக்கு உரிமை படைத்தவனே!

தீனார் ஈசா சீர் ஆரூரிற் பெருவாழ்வே... தீனர்களுடைய (ஏழைகளுடைய) தெய்வமே! சிறப்புமிக்க திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெருஞ்செல்வமே!

சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே... சிவந்த நிறத்தைக் கொண்டவனே! பொலிவு நிறைந்தவனே! தலைவனே! தேவனே! தேவர்களுடைய பெருமாளே!


சுருக்க உரை:

நேசம் மிகுந்தவனே!  தேவர்களுக்குத் தலைவனான ஈசனே! அழகனே! கடப்ப மாலையை அணிந்தவனே! காட்டில் தினைப்புனத்தைக் காத்துக்கொண்டிருந்த வள்ளியைச் சந்தித்தவனே! மனமகிழ்ந்தவனே! சூரன் இருந்த மகேந்திரபுரிக்குச் சென்று போர்புரிந்தவனே! கரிய மேகங்கள் சூழ்ந்திருக்கின்ற கற்பக மரங்கள் நிறைந்த தேவலோகத்துக்கு உரிமை பூண்டவனே! ஏழைகளின் இறைவனே! சிறப்புமிக்க திருவாரூரில் வீற்றிருக்கின்ற பெரும் செல்வமே! சிவந்த நிறம்கொண்டோனே! வேளே! பொலிவு மிக்கவனே! தலைவனே! தேவனே! தேவர்கள் பெருமாளே!

நான் வெட்கமில்லாமல், உலகத்தோர் தூற்றாதபடி, உன்னுடைய புகழைப் பாடாத நூல்களைக் கற்று அதனாலே உள்ளம் மாறிப்போய் கோணல்வழியைப் பின்பற்றாமலும்; உன்னுடைய வேலைப் போற்றிப் புகழாமலும்; ஆவல் மீதூர கூதாள மாலையை உன் தோளில் அணிவிக்காமலும்; உன் புகழைப் பேசாமலும்; சிறப்பான வேதங்களுக்கும் எட்டாததா உனது திருவடியின்மேலே விழாமலும் திரிந்து நாயினும் கடையேனான அடியேனுடைய வாழ்நாட்கள் வீணாகலாமா?  அவ்வாறு வீணாகாதபடி அருள்புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT