விவாதமேடை

கட்சித் தாவலை ஊக்குவிப்பது போன்று பிரதமர் பேசியது சரியா என்ற கேள்விக்குவாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

தவறு அல்ல!
கட்சித் தாவலை ஊக்குவிப்பது போன்று பிரதமரே பேசியது என்பது, ஊக்குவித்தார் என்ற வார்த்தையிலிருந்து வேறுபட்டிருப்பதை சந்தேகக் கண்ணோட்டத்தோடு சொல்வது. கட்சித் தாவல், குதிரை பேரம் போன்ற ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபடக் கூடாது எனக் குற்றம் செய்பவர்களுக்கு மறைமுகமாக எடுத்துக் கூறும் வகையில் பிரதமர் பேசியிருப்பதால் அதைத் தவறாகக் கருதக் கூடாது. நாட்டை வழி நடத்திச் செல்லும் உயரிய பணியை பிரதமர்செய்வதால், அவரை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது சரியில்லை.
டி.வி.கிருஷ்ணசாமி, சென்னை.

சரிதான்!
கட்சித் தாவலை ஊக்குவிப்பதுபோல பிரதமர் பேசியது சரிதான். ஒரு நாட்டின் தாய் போன்றவர் பிரதமர். ஒரு தாய் எப்படி எல்லாரையும் அன்புடன் அரவணைத்து குடும்பத்தை நல்ல பாதையில் அமைத்துச் செல்வாரே தவிர, அந்தத் தாய் யாரையும் விரோதியாகப் பார்க்க மாட்டார். அதுபோலதான் பிரதமரின் நிலையும். அதனால், கட்சித் தாவலை ஊக்குவிப்பதுபோல பிரதமர் பேசியது தவறில்லை. அந்த இடத்தில் பிரதமராக யார் இருந்தாலும் அப்படித்தான் பேசுவார்.
கட்சித் தாவலை தவறு எனச் சுட்டிக் காட்டினால் எதிரியைப் போல பார்க்கும் வாய்ப்பு வரும். அந்தச் சூழ்நிலையைத் தவிர்க்க கட்சித் தாவலை  பிரதமர் ஊக்குவிப்பதுபோல பேசியதுதான் அவருக்குச் சாதகமகாகவும், வெற்றியாகவும் அமையும். அதனால் சரியேதான்.
உஷா முத்துராமன்,  மதுரை.

தகுதிக்கு ஏற்றதல்ல!
நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு கட்சி மாறுவதும், கட்சி மாற பிற கட்சியினரைத் தூண்டுவதும் மிகவும் இயல்பான ஒன்று. சட்டப்பேரவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர் போன்ற பதவிகளை வகிப்பவர், ஒருவர் மட்டும் கட்சி மாறினால் பதவி பறிபோகும். கூட்டமாக, அதிகமான நபர்கள் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்குத் தாவினால், அந்தக் கட்சி உடைந்துவிட்டதாகக் கருதி, பதவி பறிபோகாது. அது கட்சித் தாவலாகவே கணக்கில் வராது. எனவே, அந்த முறையில்தான் பிரதமர் பிற கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜவுக்கு வருவதாக கூறியிருக்கிறார். தேர்தல் நேரமாக இருப்பதால் இந்த மாதிரியான பேச்சுகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. தமிழகத்திலும் ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியிலிருந்து 40 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு வர இருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கின்றனர். எனினும், பிரதமர் போன்ற உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், கட்சித் தாவலைத் தூண்டுவது போல் பேசியது அவர் தகுதிக்கு ஏற்றதல்ல.
மா.தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

தேர்தல்கால பேச்சு!
இன்றைய அரசியல் தேர்தல் காலத்தில் மக்களவைக் கவரும் வகையில் பிரதமர் மட்டும் அல்ல, அனைத்து அரசியல்வாதிகளின் அரசியல் பேச்சுகள் அமைவது இயல்பானது. இத்தகைய அரசியல் பேச்சுகள் அனைத்தும் தேர்தல் முடிந்த பிறகு மறந்து விடும்.
எஸ்.நாகராஜன், அஸ்தினாபுரம்.

தரம் தாழலாமா?
ஒரு சாதாரண குடிமகன் பேசுகின்ற பேச்சுபோல, பிரமரின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் கட்சிகள் தனது பதவி மற்றும் சுயலாபத்துக்காக கட்சித் தாவலை ஆதரிக்கிறார்கள். நாட்டின் பொறுப்பான பதவியிலுள்ள பிரதமர் கட்சித் தாவலை ஊக்குவித்துப் பேசுவது ஜனநாயக விரோத செயலாகத்தான் தெரிகிறது. இதுபோன்ற பேச்சுகள் பிரதமர் பதவியை தரம் தாழ்த்துவது போன்று உள்ளது.
நன்னிலம் இளங்கோவன்,
மயிலாடுதுறை.

குற்றம் அல்ல!
இது தேர்தல் காலத்து பேச்சு என்று எடுத்துக் கொண்டால் மோடி அவ்வாறு பேசியது சரி என்று சொல்லலாம். ஆனால், பிரதமர் பதவியில் இருப்பதால் கட்சியின் முன்னோடி என்று எடுத்துக் கொண்டால் கட்சித் தாவலை ஊக்குவிப்பது என்ற பேச்சு சரியில்லை. உலக அரசியல் அரங்கில் ஒரு பாதுகாப்பான ஜனநாயகம் என்ற தாக்கத்தை ஏற்படுத்தி வந்த ஒரு தலைவர், இவ்வாறு பேசி இருக்கக் கூடாதுதான். இது தேர்தல் ஜுரம் பற்றிக் கொண்ட நேரமாயிற்றே. ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தொங்கு மக்களவை அமைந்து விட்டால் எதற்கும் இந்த ஊக்கம் வெற்றி பெறும் அல்லவா? அதற்காகவே அவர் அவ்வாறு பேசி இருப்பார். தேர்தல் பிரசாரத்தில் அவரும் ஒரு அரசியல்வாதிதானே. எனவே, அவர் பேச்சில் இப்போது குற்றம் காண முடியாது.
மகிழ்நன், கடலூர்.

பதவிக்கு அழகல்ல!
ஒரு மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்யும் பிரதமர், அங்கு ஆளும் கட்சி மாற்றுக் கட்சியாக இருந்தால் அவர்களின் செயல்பாடு பற்றி மேடைகளில் பேசி வாக்கு சேகரிக்கலாம் அல்லது நமது அரசு அந்த மாநிலத்துக்குச் செய்த உதவிகளைக் குறிப்பிட்டு, அதை அந்த மாநில அரசு மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை என்று குற்றஞ்சாட்டலாம். அங்கு தாம் சார்ந்த கட்சி (பாஜக) வெற்றி பெறாது என்பதை அறிந்தே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்று ஒரு குழுவினரை கட்சித் தாவலுக்கு ஊக்குவிப்பதுபோல பேசியது தவறாகும். அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர்கூட இப்படிப் பேசியிருக்கலாம். பொறுப்பு மிக்க பிரதமர் பேசியது, அவர் பதவிக்கு அழகல்ல.
அ.கருப்பையா, பொன்னமராவதி.

தவிர்த்திருக்கலாம்!
வேண்டாதவை தவிர்த்தல் நன்று. வலிமை மிக்க அரசை 2014-இல் பாஜக அமைத்தது. அது நல்ல அரசாக அமையவில்லை என்பதற்கான ஓர் அறிகுறி, 40 திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேர இருக்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் பேச்சு. முன்பு பாஜக எதிர்த்தவற்றை இன்று கையாளக் கூடாது. இன்றைக்குத் தவறாகத் தெரிவதை காங்கிரஸ் கட்சி நாளை செய்யக் கூடாது. 130 கோடி மக்களின் நம்பிக்கையை பாஜக இழந்து விட்டது என்ற அகிலேஷ் யாதவின் கூற்றுக்கு ஒப்பானதாக பிரதமரின் பேச்சைக் கொள்ளலாம். தேர்தல் பிரசாரத்தின்போது இதுபோன்ற பேச்சுகளைத் தவிர்த்தல் நல்லது.
எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

எதிர்க்கட்சியினரை...
கட்சித்தாவலை ஊக்குவிப்பது போன்று பிரதமர் பேசியது தவறானதுதான். இன்றைய சூழ்நிலை எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமான சூழல். இந்தத் தேர்தலில் அத்தகைய சூழல் எதிர்க்கட்சியினருக்கு அமையாது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி, அரசியல்வாதிகளின் பதவி ஆசையைத் தூண்டி தங்கள் கட்சியில் (பாஜக) இணைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை பலமற்றவர்களாக மாற்ற இப்படிப் பிரதமர் பேசியிருக்கிறார். கட்சித் தாவல் தடைச் சட்டம் இருந்தாலும் மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் இப்படிப் பேசுவது குறையும்.
ப.சுவாமிநாதன், சென்னை.

சாதனைகளை விளக்கி...
கட்சிதாவலை ஊக்குவிப்பது போல பிரதமர் பேசியது சரியல்ல. தேர்தல் நெறிமுறைகள் அமலில் உள்ளபோது திரிணமூல் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 40 பேர் பாஜகவில் விரைவில் சேருவார்கள் எனப் பிரதமர் மோடி பேசினார். மேலும், ஊழல் புரிவதில் காங்கிரசுக்கும், திரிணமூல் காங்கிரசுக்குமிடையை போட்டி நிலவுவதாகவும் பாஜக கூட்டத்தில் பிரதமர் தெரிவித்த தகவல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதாக உள்ளது.  ஆளும் கட்சியில் உள்ள பொறுப்புள்ள தலைவர்கள் சாதனைகளை விளக்கி வாக்கு கேட்பதே சரி.
எம்.ஜோசப் லாரன்ஸ்,
திருச்சி.

தோல்வி பயம்!
இந்த மக்களவைத் தேர்தலில் போதுமான பாஜக உறுப்பினர்கள்  வெற்றி பெறாமல் போனால்... என்ற பிரதமர் மோடியின் மனதின் குரலின் வெளிப்பாடாகவே அவரது பேச்சு தெரிகிறது. இந்தப் பேச்சு கட்சித் தாவலை ஊக்குவிப்பதாகும். தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தேர்வு பெற்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கட்சித் தாவலில் ஈடுபட்டால், உறுப்பினர் பதவி பறிபோகாது என விதி உள்ளது. இதை மனதில் கொண்டு பிரதமர் பேசியுள்ளது, தோல்வி பயத்தின் வெளிப்பாடாகவே கருதப்படும். சரியானது அல்ல.
மு.அ.ஆ.செல்வராசு, 
வல்லம்.

அர்த்தமற்றது!
இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களில், மோடி அளவுக்கு யாருமே அரசியலுக்கு மதத்தையும் ராணுவத்தையும் பயன்படுத்தியதில்லை. மேற்கு வங்கத்தில் கட்சித் தாவலை ஊக்குவிப்பது போல அவர் பேசியது அர்த்தமற்றது. இந்தியாவின் உயரிய  பொறுப்பில் உள்ள ஒருவரிடமிருந்து இதுபோன்ற பேச்சுகள் வருவது சரியல்ல.
பொன்.கருணாநிதி, கோட்டூர்.

=

பாலியல் புகார் பிரச்னையில் உச்சநீதிமன்றத்தின் அணுகுமுறை சரிதானா?

இதுபற்றி வாசகர்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. கருத்துகளை பத்து வரிகளுக்கு மிகாமல் அஞ்சல் அட்டையில் எழுதி, வரும் திங்கள்கிழமைக்குள் கிடைக்குமாறு

விவாத மேடை பகுதி, தினமணி, 
29, இரண்டாவது பிரதான சாலை, 
அம்பத்தூர் தொழிற்பேட்டை, 
சென்னை  600 058 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT