விவாதமேடை

"மாநில அரசு, நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிப்பது போல மத்திய அரசு மாநிலங்களை பிரிப்பதில் தவறில்லை என்கிற கருத்து சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

DIN

 தவறேதும் இல்லை
 மொழி, நிர்வாகம், நிதி பிரித்தளிப்பு மற்றும் இன்னபிற காரணங்களுக்காக மத்திய அரசு மாநிலங்களை பிரிப்பது என்பது சரியானதே. சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட், ஆந்திரம், தெலங்கானா போன்ற மாநிலங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டவையே. ஆனாலும், புதிதாகப் பிரிக்கப்பட்ட மாநிலத்தில் தங்களது ஆட்சியை அமைக்க வேண்டும் அல்லது இன்னொரு கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் செய்துவிட வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில் மத்திய அரசு செயல்படக்கூடாது. மக்களுக்கு நன்மை பயக்குமெனில் பிரிப்பதில் தவறேதும் இல்லை.
 கரு. பாலகிருஷ்ணன், மதுரை.
 அது வேறு இது வேறு
 அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் லாபத்துக்காக, மாநிலத்தைக் கூறுபோட முனைவது தவறாகும். மாவட்டப் பிரிப்பு வேறு; மாநிலப் பிரிப்பு வேறு. மாநிலப் பிரிப்பு என்பது, புவியியல் அடிப்படையில், மொழி அடிப்படையில் இருக்க வேண்டுமே தவிர, அரசியல் லாப நோக்குக்காக இருத்தல் கூடாது. இதனை அனுமதித்தால், அடுத்து ஜாதி ரீதியாக மாநிலப் பிரிப்பைக் கோருவார்கள். அதனை ஏற்க முடியுமா? ஆந்திரத்திலிருந்து தெலங்கானாவைப் பிரித்தது தவறு என்று தெலங்கானா மாநில மக்கள் தற்போது உணர்கின்றனர். எனவே, மாநிலங்களைப் பிரிக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.
 பூ.சி. இளங்கோவன், அண்ணாமலை நகர்.
 அரசியல் நோக்கம்
 பல மாநிலங்களிலும் புதிய மாநில கோரிக்கைகள் அவ்வப்போது எழுகின்றன. பாஜக இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து புதிய மாநிலங்கள் எதையும் உருவாக்கவில்லை. ஆதலின் புதிய மாநிலங்கள் கொள்கையில் அரசு நிதானத்தை கடைப்பிடிப்பதை அறியமுடிகிறது. பக்குவம் இல்லாத மாநில கோரிக்கைகள் அரசியல் நோக்கம் உடையவை. இவை மக்களை குழப்பமடையச் செய்கின்றன. இயற்கை அமைப்பு, பொருளாதார வளர்ச்சி, மொழி, நிர்வாகம் இவற்றின் அடிப்படையிலேயே புதிய மாநிலக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும். பரப்பளவையும் மக்கள்தொகையும் புதிய மாநிலங்களுக்கான காரணிகளாகக் கொள்ளக்கூடாது.
 க. ரவீந்திரன், ஈரோடு.
 சாத்தியமன்று
 நிர்வாக வசதிக்காக மாநிலங்களைப் பிரிக்கலாம் என்று கருதுவது தவறு. இதனால் பிரிவினை சிந்தனையே தலைதூக்கும். மாநிலம் வளர்ச்சியடைய வேண்டும் என்கிற எண்ணம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். புவியியல் அடிப்படையில் பிரித்து விடலாம். ஆனால், தேவைப்படும்போது கொள்கையளவில் ஒன்றிணைவது சாத்தியமன்று. "மண்ணின் மைந்தர்கள்' என்கிற கோஷம், மக்களிடையே கருத்து வேறுபாடுகளை அதிகப்படுத்திவிடும். அரசுகள், சரியான, ஊழலற்ற நிர்வாகம் செய்வதைப் பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர, மாநிலப் பிரிப்பு குறித்து சிந்திப்பது தேவையற்ற அவப்பெயரையே அரசுக்கு உருவாக்கும்.
 ச. சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.
 வரலாற்றுப் பிழை
 நிர்வாக வசதிக்காக பொதுமக்களின் விருப்பத்தோடும், ஆதரவோடும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாநிலங்கள் உருவாவதில் தவறில்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக மாநிலங்கள் பிரிக்கப்பட்டால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும். முன்னர், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை தமிழகத்தோடு இணைப்பது என்று அன்றைய மத்திய அரசு முடிவெடுத்தபோது, அதனை எதிர்த்து புதுச்சேரி பகுதி மக்களே மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டதையும், அதனால் அம்முடிவை அன்றைய மத்திய அரசு கைவிட்டதையும் நாம் மறந்துவிடக்கூடாது.
 சொ. முத்துசாமி, பாளையங்கோட்டை.
 முன்மாதிரி இல்லை
 மாநிலத்தைப் பிரிப்பதற்கு முன்னர் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்காமல் அரசு தன்னிச்சையாக மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க முற்படுவது மிகவும் ஆபத்தான போக்கு. மாநிலம் பிரிக்கப்பட்டால் இரு மாநிலங்களும் வளமாக இருக்கும் என்று கூறுவதற்கு முன்மாதிரி எதுவும் இல்லை. ஆந்திரத்திலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. இப்போது இரு மாநிலங்களுக்கிடையே பகைமைப் போக்குதான் நிலவுகிறது. இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியால் காணொளி வாயிலாக எல்லா அதிகாரிகளையும் உடனடியாகத் தொடர்பு கொள்ளும் நிலையில் மாநிலப் பிரிப்பு நிர்வாக வசதிக்காக என்பதை ஏற்க முடியவில்லை.
 ராஜு நரசிம்மன், சென்னை.
 தேவையற்ற சுமை
 மாவட்டங்களோடு ஒப்பிட்டு மாநிலங்களைப் பிரிக்க எண்ணுவது தவறு. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போது எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். மேலும் போக்குவரத்து வரி, டோல்கேட் வரி, மாநிலங்களுக்கு இடையேயான பெட்ரோல் டீசல் வரி வேறுபாடு இவையெல்லாம் மக்களுக்கு தேவையற்ற சுமைகளாகும். தற்போது இ சேவை மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம் மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு-இறப்பு சான்றிதழ் அனைத்தையும் விண்ணப்பித்துப் பெற முடியும். இப்படிப்பட்ட நிலையில் மாநிலங்களை பிரிப்பதால் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை.
 மா. ஜான் ரவிசங்கர், அஸ்தம்பட்டி.
 சிக்கல்
 மாநில அரசு நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பது போல் மத்திய அரசும் மாநிலங்களைப் பிரிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவ்வாறு பிரிக்கும் போது மீண்டும் பிரச்னைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆந்திரம் - தெலங்கானா பிரிவினையில் பலத்த சிக்கல் உருவானது. அதேபோல் வடகிழக்கு மாநிலங்கள் உருவாகும் போதும் பிரச்னைகளுக்கிடையில்தான் உருவாயின. பெரிய மாநிலத்தை நிர்வகிக்க இயலாத நிலையில், அதனை இரண்டாகப் பிரிக்கும்போது இரண்டு மாநிலங்களுக்கும் சம அளவில் எல்லா வளங்களும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 பி.கே. ஜீவன், கும்பகோணம்.
 பிரச்னை பெருகும்
 ஒரு மாநிலத்தில் மாவட்டங்களை பிரித்து நிர்வாக மேம்பாட்டை எளிமைப் படுத்துவது என்பது ஒப்புக்கொள்ள வேண்டியதே. அதேபோல் ஒருமாநிலத்தை நிர்வாக எளிமைக்காக பிரிப்பதென்பதும் ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் தமிழ்நாட்டைப் பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்குவதென்பது தேவையற்றது. அதனால் நிர்வாகம் எளிமையாகும் என்பதைவிட பிரச்னையே பெருகும். மொழிவாரி மாநிலம், ஜாதி வாரி மாநிலமாகி ஜாதிச்சண்டைகள் பெருகும். மக்களிடையே இருக்கும் ஒற்றுமை குறையும். அரசின் பொருளாதாரம் அழிவைச் சந்திக்கும்.
 எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.
 ஏற்புடையதல்ல
 நிர்வாக வசதிக்காக அல்லது மேம்பாட்டிற்காக, ஒரு மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மாவட்டங்களைப் பிரிக்கும் பொதுவான அதிகாரம் மாநில அரசைச் சார்ந்ததாக இருப்பதே சரியானது. மத்திய அரசு இந்த அதிகாரத்தை வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக கூட, மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக பயன்படுத்தக் கூடாது. இது நம் மக்களாட்சி மாண்புக்கு ஏற்புடையதல்ல. இன்று அரசியல் காரணங்களுக்காக சிலர் இந்தக் கருத்தைப் பேசி வருவது, தேவையின்றி மாநிலத்தை துண்டாடுவதற்கு ஒப்பான செயல். இது சரியல்ல.
 கு.மா.பா. திருநாவுக்கரசு, சென்னை.
 பொருந்தாது
 நாடு சுதந்திரம் அடைந்த போது அரசியல் சட்டப்படி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது காலத்தின் கட்டாயம். ஆனால் இன்று இக்கருத்து பேசப்படுவதற்கா ன காரணம் தமிழ்நாட்டைப் பிரித்து புதிய மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான். இன்று அதற்கான சூழல் இல்லை என்பதே உண்மை. தமிழ்நாட்டில் அதிகமான மக்கள்தொகையும் இல்லை. நிர்வாகக் குறைபாடும் இல்லை. எல்லா மாவட்டங்களும் ஆங்காங்குள்ள இயற்கை வளங்களுக்கேற்ப சீரான வளர்ச்சியில் உள்ளன. மத்திய அரசு நிர்வாக வசதிக்காக மாநிலங்களைப் பிரிக் கும் கொள்கையில் தவறில் லை. எனினும் இக்கொள்கை இப்போது தமிழ்நாட்டிற்குப் பொருந்தாது.
 அ. கருப்பையா,
 பொன்னமராவதி.
 அதிகாரம் உண்டு
 மத்திய அரசு மாநிலங்களைப் பிரிப்பதில் தவறு எதுவும் காண முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மாநில சீரமைப்பிற்கு மாநிலங்களைப் பிரிக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரமும் உண்டு. மாநிலத்தினுள் சம வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதிகளுக்காக மாநிலங்கள் பிரிக்கப்படுவது பலமுறை நடந்தேறியுள்ளது. மாநில அரசு மாவட்டங்களைப் பிரிப்பதும் இதே காரணங்களுக்காகத்தான். சீரான நிர்வாகம், பரவலான தொழில் வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் இவ்வாறு பிரிப்பது முற்றிலும் சரியானதே.
 கே. ராமநாதன், மதுரை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT