அரசின் கடமை
ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் உண்மையின் அடிப்படையில் செயல்படுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிடுவது ஏன் என்ற கேள்வியை எதிர்கட்சிகள் எழுப்புகின்றன.நேருவின் ஆட்சிக் காலத்தில் பஞ்சசீலக் கொள்கை உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆளும் அரசுக்கு அவசியமாகிறது.
மா.பழனி, கூத்தப்பாடி.
பாமரன்கூட கேட்பான்
இன்று நேற்று அல்ல; பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நம் இந்தியப் பகுதிகளுக்குள் ஊடுருவுவதை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். இதை மத்திய அரசு அறிந்தும் உரிய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்யவில்லை என்பதே உண்மை. பயங்கரவாதிகளின் தாக்குதல் உளவுத் துறையின் தோல்வியையே காட்டுகிறது. இதுகுறித்து பாமரனும் கேள்வி கேட்பான். எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? பதில் சொல்வது அரசின் கடமை.
பி.சுந்தரம், வெண்ணந்தூர்.
வரிப் பணம் வீண்
ஆபரேஷன் சிந்தூர் மூலம் காஷ்மீரை மட்டுமல்ல; மொத்த இந்தியாவையே ராணுவம் பாதுகாத்துள்ளது என்பதே உண்மை. இதை எதிர்க்கட்சிகள் பாராட்டாமல், பாஜக அரசைக் குற்றம்சாட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது பொறுப்பற்ற செயல். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம் செல்வதே அதைச் செயல்பட விடாமல் செய்வதற்கே அன்றி, மக்களுக்காக அல்ல; மக்களின் வரிப் பணம் வீணாவதுதான் மிச்சம். ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய மத்திய அரசுக்கும், ராணுவத்துக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
கா.ராமசாமி, கீழப்பனையூர்.
உலகமே வியந்தது
உலகமே வியந்துப் பார்த்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் தேசத்தின் வெற்றியாக நினைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதை அபத்தமாகத்தான் நினைக்க வேண்டும். இவர்கள் சொல்ல வருவது என்ன? வெற்றி பெற்றதில் இவர்களுக்கு மகிழ்ச்சி இல்லையா? மும்பை தாக்குதலுக்கு மெழுகுவர்த்தி ஊர்வலம் போனவர்கள் இதைக் குறை சொல்லலாமா? குறைந்தபட்ச நாகரிகம், தேசப்பற்று வேண்டாமா? தேசத்தின் ஒற்றுமையைக் கேலியாக்க முயற்சிக்கிறார்கள்.
பி.பாலசுப்பிரமணியன், அம்பாசமுத்திரம்.
வரும்முன் காப்பதே...
இந்திய எல்லையின் வழியாக தீவிரக் கண்காணிப்பையும் மீறி பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்கள். அதனால்தான், எதிர்க்கட்சிகள் ஆளும் அரசின் மீது பல்வேறு கேள்விகளை முன்வைக்கின்றனர். அதற்கு ஆளும் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற தாக்குதல் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். வருமுன் காப்பதுதான் நல்ல அரசாங்கம்; அதை ஆளும் அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு.தமிழ்செல்வி, அம்பத்தூர்.
நேர்மை மட்டும் போதாது
"ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் முழுமையாக வெளிவரவில்லை. குற்றவாளிகள், அவர்களின் பின்னணி, நடவடிக்கையின் வழிமுறைகள் போன்றவை பொதுமக்கள் பார்வைக்கு முன்வைக்கப்படவில்லை. அரசியலில் நேர்மை மட்டும் போதாது; நேர்மையாக இருப்பது தெரியும் விதமாக செயல்பட வேண்டும் என்பதும் உண்மைதான். எனவே, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு முழுமையாக சரியெனச் சொல்ல முடியாதபோதிலும், அதை முற்றிலும் தவறாகக் கூறவும் முடியாது.
சா.முஹம்மது ஹுசைன், அறந்தாங்கி.
தார்மிகக் கடமை
நாடு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உள்ளாகும்போது, எதிர்க்கட்சி-ஆளும் கட்சி என்ற பேதம் இல்லாமல் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு ஓரணியில் திரள வேண்டும். அதே வேளையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்த சில சந்தேகங்களுக்கு எதிர்க்கட்சிகளுக்கு ஆளுங்கட்சி விளக்கம் அளிக்க வேண்டிய தார்மிகக் கடமையை தட்டிக் கழிக்கக் கூடாது. நேர்மையான விளக்கத்தை ஆளுங்கட்சி அளிக்க வேண்டும்.
உதயா ஆதிமூலம், திருப்போரூர்.
மறைமுக பதில்கள்
நெருக்கடியான தருணத்தில் தாய்நாட்டின் வெற்றியைத் தோல்வியாகக் காட்டி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் எந்த நாட்டிலும் இருக்குமா என்பது சந்தேகம்தான். போரில் விமானங்கள் வீழ்த்தப்பட்டனவா, அவை எத்தனை? ஏன்? என்ற விவரங்களை பொதுவெளியில் வெளியிடுவதில் அரசுக்கு சர்வதேச சிக்கல்கள் இருக்கலாம். அதேபோல் "டிரம்ப் பொய்யர்' என்பதை நேரடியாகச் சொல்லாமல், மறைமுகப் பதில்களாலும், நமது நடவடிக்கைகள் மூலமும் உலகுக்கு உணர்த்துவதுதான் ராஜதந்திரம். இந்தச் சூழலை மத்திய அரசு சரியாகவே கையாள்கிறது.
முகதி.சுபா, திருநெல்வேலி.
நியாயமானதே...
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக, அதற்கு முன்பாக நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத படுகொலைகளின் முழு விவரங்களையும், அவற்றின் உண்மை நிலவரங்களையும், பின்னர் இந்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகள் அறிந்து கொள்ள குரல் எழுப்புவது நியாயமானதே. மேலும்,பஹல்காம்தாக்குதல் நிகழ்வதற்கு பாதுகாப்பு குறைபாடுகள்தானே காரணம் எனும் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு நிச்சயம் ஆளும் மத்திய அரசு பதில் கூற வேண்டிய இடத்தில் உள்ளது. எனினும், எதிர்க்கட்சிகளின் கருத்துகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
என்.கே.ராஜா, சென்னை.
வருந்தத்தக்கது
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கட்டமைப்பை வெறும் 22 நிமிஷங்களில் அடியோடு நிர்
மூலமாக்கிய நமது வீரர்களின் தீரச் செயலை பாராட்டுவதை விடுத்து, இந்த நிகழ்வை மக்களவையில் விவாதித்து குற்றம் காண முற்படும் எதிர்க்கட்சியினரின் செயல்பாடுகள் வருத்தமடைய வைக்கின்றன. இந்த ஆபத்தான தருணத்தில் ஆளும் கட்சியுடன் இணைந்து செயல்படுவதை விடுத்து, குற்றச்சாட்டுகளை அடுக்குவது பொறுப்பான எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல; இது பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான ஓர் அச்சுறுத்தல் நடவடிக்கை.
கே.ராமநாதன், மதுரை.
பெருமையே...
பஹல்காமில் நடைபெற்றது மத அடிப்படையிலான அதிதீவிர பயங்கரவாதத் தாக்குதல் என்பதை நாம் மறுக்க முடியாது. அதற்குப் பதிலடியாக நடத்தப்பட்டதுதான் ஆபரேஷன் சிந்தூர். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலக அரங்கில் நிலைநாட்டுவதற்கு அது கட்டாயத் தேவையானது. எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாமல், அப்பாவி பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பயங்கரவாத முகாம்களை மட்டுமே அழிக்க நடைபெற்ற துல்லியமான தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர். இதன் வெற்றி தாய்நாட்டுக்குப் பெருமை.
வீ.வேணுகுமார், கண்ணமங்கலம்.
ஆதாரமில்லாதவை
ஆபரேஷன் சித்தூர் நடவடிக்கை நமது நாட்டின் ராணுவ வலிமையை உலக நாடுகள் அனைத்தும் வியக்கும் வண்ணம் நடந்தது என்பதை, நமது எதிரி நாடுகளே ஒப்புக்கொள்ளும். பொதுவாக, நமது நாட்டில் மத்தியில் எந்தவொரு கட்சி ஆட்சி செய்து நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தாலும், அதையும் குறை கூறுவதுதான் எதிர்க்கட்சிகளின் நிலையாக இருக்கிறது. அதிலும் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகள் மீது சரியான ஆதாரம் இல்லாமல் சேற்றை வாரி வீசும் இன்றைய எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் வருத்தம் அளிக்கின்றன.
அ.குணசேகரன், கடலூர்.
தெளிவுபடுத்தவில்லை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நிறைவடையவில்லை என்றும், மீண்டும் பாகிஸ்தான் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தலாம் என்றும் மத்திய அரசு கூறுவதைப் பார்க்கும் போது வெளிப்படைத் தன்மை இல்லாமல் மத்திய அரசு செயல்படுகிறதோ என்று தோன்றுகிறது. பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து 100 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், தற்போதுவரை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. முந்தைய அரசுகளைக் குறை கூறாமல் முக்கிய பிரச்னைகளை விவாதித்துத் தீர்வு காண்பதைத்தான் மக்கள் விரும்புவார்கள்.
என்.வி.சீனிவாசன், புது பெருங்களத்தூர்.
காங்கிரஸா காரணம்?
ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவரங்களை எதிர்க்கட்சிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதைவிடுத்து, வெவ்வேறு விதமான அறிக்கைகள் வெளியிடுவது ஏற்புடையதல்ல. அதிபர் டிரம்ப் வெளியிடும் அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்காமல், பாகிஸ்தான் பிரிவினைக்கும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்னைகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார் மத்திய உள்துறை அமைச்சர். இதை ஏற்க முடியாது.
அ.கருப்பையா, பொன்னமராவதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.