விவாதமேடை

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்-இந்தியா என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து... வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

பயங்கரவாத தாக்குதலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

DIN

வரும் முன் காப்பதே கடமை!

பயங்கரவாத தாக்குதலை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. பிரிவினைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவை சமுதாயத்தின் சாபக்கேடாக உலகம் முழுவதும் பின்னிப் பிணைந்து வியாபித்திருக்கின்றன. பயங்கரவாத தாக்குதலை முன்கூட்டியே அறிந்து, அதைத் தடுப்பதற்கு உளவுப் பிரிவால் ஏன் முடியாமல் போனது? வரும் முன் காப்பதே அரசின் கடமை. பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என்று கூறினால் மட்டும் போதாது. அதற்கான செயல்திட்டங்களை வகுத்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் முனைப்புக் காட்ட வேண்டும்.

சீனி.மணி, பூந்தோட்டம்.

செறு பகை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பதை உலக வரைபடத்திலிருந்து நீக்கி, ஜம்மு காஷ்மீர் என்பதை இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்ல, நமது உள்நாட்டில் தேசத் துரோகச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பேசுபவர்களுக்கு அது சரியான பதிலடியாக இருக்கும். உறுபசி, ஓவாப் பிணியை மட்டுமல்ல, செறு பகையையும் முழுமையாக ஒழிக்க வேண்டியது நமது கடமையாகும்.

கோவி.ராதாகிருஷ்ணன், அரக்கோணம்.

அழிப்பதே ஒரே தீர்வு

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பிருப்பது உண்மை. பாகிஸ்தானில் எப்போதுமே நிலையான ஆட்சி இருந்ததில்லை. ராணுவ ஆட்சிதான். அங்கே நிதிநிலைமை படுபாதாளத்தில் தள்ளாடுகிறது. உள்நாட்டின் மோசமான நிதிநிலை மற்றும் ஆட்சிக் குறைபாடுகளை திசைதிருப்பவும் இந்தியாவை எப்போதும் சீண்டி அமைதியைக் குலைப்பதும்தான்அந்நாட்டின் ஒரே லட்சியம். அதற்கு அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்றது, தெரிந்தே செய்த அட்டூழியம்... சதி. பாகிஸ்தான் அருகே உள்ள நமது எல்லைக்கு பக்கத்தில் பயங்கரவாதிகளின் கூடாரங்கள் நிச்சயம் இருக்கும். அவற்றைத் தாக்கி பயங்கரவாதிகளை அழிப்பதே இதற்கு ஒரே தீர்வு.

கலைப்பித்தன், கடலூர்.

அறவழி

ஆக்கம் தேவை; அழிவு வேண்டாம். அறவழி போதனை நன்றாக ஆக்கம் தரும். அது சமாதானம், சமத்துவத்தை உருவாக்கும். கருணைக் கடல் மிக்க நாடு இந்தியா. கொல்லாமையை விரதமாகவே கொண்டு ஆட்சி நடத்தியவர் மாமன்னர் அசோகர். அவருடைய உருவம் உள்ள சின்னத்தைத்தான் இந்தியா கொண்டுள்ளது. இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதுதான் பாகிஸ்தான். இதே அறவழி, உணர்வு அங்கும் தழைக்க வேண்டும். உலகுக்கே வழிகாட்டியாக இந்தப் பிராந்தியம் உயர்வடைய வேண்டும். இதற்கு பாகிஸ்தானும் துணை நிற்க வேண்டும்.

எஸ்.ஜி.இசட்கான், திருப்பூர்.

நிரந்தரத் தீர்வு

பயங்கரவாதிகள் ஊடுருவியதை அறியாதது, உளவுத்துறை செய்த முதல் பிழை. அது பெரும் தவறுக்குக் காரணமாகிவிட்டது. உளவுத்துறை காஷ்மீர் பகுதியில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால், அசம்பாவிதம் நடக்காமல் தடுத்திருக்கலாம். காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியை இந்தியாவுடன் இணைப்பது நிரந்தரத் தீர்வைத் தரும். காலம் நேரம் கனிந்து இந்தியாவுக்குச் சாதகமாக அமையட்டும்.

எம்.ராஜம்மாள், சென்னை.

நடக்கவிருப்பதை சிந்திப்போம்

காஷ்மீரில் இதுபோன்ற கொடூரத் தாக்குதல் மீண்டும் நடைபெறாமல் இருக்க, உளவுத் துறை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. காஷ்மீரில் எல்லா இடங்களிலும் குறிப்பாக ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளி, கல்லூரிகளில் ராணுவப் பாதுகாப்பைப் பலப்படுத்த வேண்டும். நடந்து முடிந்ததைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்காமல், நடக்க உள்ளது குறித்துச் சிந்திப்பதே மேலானது.

கா.ராமசாமி, கீழப்பனையூர்.

அடிப்படை உரிமை

பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற அப்பாவி பொது மக்கள் மீது நடந்த தாக்குதல், ஒவ்வோர் இந்தியனின் இதயத்தையும் கிழித்தெறிந்த வலியைக் கொடுத்துள்ளது. அமைதிக்கு வழி தேடும் யாத்திரையின் பாதை, ரத்தம் சிந்தும் பாதையாக மாறிவிடுவது வேதனையின் உச்சம். இந்தியா இந்நிலையில் என்ன செய்ய வேண்டும்? பாதுகாப்பு என்பது சிறப்பு ஏற்பாடல்ல; அடிப்படை உரிமை என்பதாக அரசின் அணுகுமுறை மாற வேண்டும். பயணங்கள் நடைபெறும் முக்கிய இடங்களில் உளவுத் துறை தகவல்களை முன்கூட்டியே செயல்படுத்தும் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு நிதி, ஆயுதம், ஆதரவு வழங்கும் சக்திகள் மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உலகறியச் செய்ய வேண்டும்.

முகம்மது ஹுûஸன், ஊரனிப்புரம்.

படையெடுக்க வேண்டும்

பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற மத தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் புகலிடம் கொடுத்த பாகிஸ்தான் மீது இந்தியா காலம்தாழ்த்தாது படை எடுக்க வேண்டும். இரட்டை கோபுரங்களைத் தாக்கிய பின்லேடனை அமெரிக்கா கொன்றதுபோல், 26 பேரைக் கொன்றவர்கள் அனைவரும் உலகின் கண்முன் நிறுத்தப்பட்டு கொல்லப்பட வேண்டும். உளவுத் துறையின் சோதனையில் மெத்தனம் என்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட பிறகும் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமானது.

நா.ஜெயராமன், பரமக்குடி.

ராணுவத்தில் வீரர் பற்றாக்குறை

தீவிரவாதம் என்பது எந்த வடிவத்தில், எந்த இடத்தில் நிகழ்ந்தாலும் அது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, தண்டிக்கத்தக்கதுமாகும். மத்திய அரசு இதை இன்னும் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியிருப்பதை நாம் மறந்து விடக் கூடாது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரும் தமக்கான விமர்சனத்தை வைத்திருந்தார். எல்லைப் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை. ராணுவத்தில் வீரர் பற்றாக்குறை என்ற செய்தி மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் போதுமான ராணுவ வீரர்களும் மாநில காவல் துறையும் பணியில் இருந்திருக்க வேண்டும் இன்னொரு முறை இது மாதிரியான நிகழ்வுகளுக்கு இடம் தரக்கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

உதயா ஆதிமூலம், திருப்போரூர்.

இணைந்து செயலாற்ற வேண்டும்

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் அதன் கொடிய விளைவுகளை இரு தரப்பினரும் சந்திக்க நேரிடும். எனவே, போர் தவிர்க்கப்பட வேண்டும். தீவிரவாதிகளின் இலக்குகளைக் குறி வைத்து அடியோடு அழிப்பதற்கான வியூகங்களைத் திட்டமிட வேண்டும். உள்நாட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை இனங்கண்டு கூண்டோடு அழிக்க வேண்டும். ஜாதி, மத , இனப் பாகுபாடுகளை வைத்து உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டுபவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் நாட்டின் தற்போதைய நிலையை உணர்ந்து, முழுமனதுடனும் ஒற்றுமையுணர்வுடனும் அரசியல் ஆதாயம் பாராது மத்திய அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்.

கே.ராமநாதன், மதுரை.

எதிர்வினை

பயங்கரவாதிகள்மூலம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு மிகுந்த தொல்லை கொடுத்து வருகிறது. அதுவும் இப்போது நடந்த தாக்குதலை யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. ஆயிரம் கனவுகளோடு சுற்றுலாவுக்கு வந்த பயணிகளை மதத்தைத் தெரிந்துகொண்டு பயங்கரவாதிகள் கொன்ற விதம் பொறுத்துக்கொள்ளமுடியாது. இப்போதும் நாம் அகிம்சையை தேர்ந்தெடுப்போமேயானால், அது நம் நாட்டுக்கு நாம் செய்யும் துரோகம் . எனவே, இந்தியாவின் எதிர்வினையை கண்டிப்பாக அவர்களுக்கு உரிய முறையில் நாம் தெரிவிக்க வேண்டும். இந்த எதிர்வினைச் செயல் பாகிஸ்தானுக்கு மறக்க முடியாத பாடமாக இருக்க வேண்டும். அகிம்சை வாதிகளாக நாம் இருந்தாலும் இதுதான் நம்முடைய முடிவு.

அ. பட்டவராயன், திருச்செந்தூர்.

அசம்பாவிதம்

முதலில் தாக்குதல் நடத்திய நபர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து நகர்வுகளும் பயங்கரவாதிகளை நெருங்க எடுக்கும் முயற்சியாகத்தான் இருக்க வேண்டும். அதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் ராஜீய ரீதியாகப் பேசினால் மட்டுமே சாத்தியமாகும். பதிலடி என்பது பயங்கரவாதிகளுக்கு மட்டுமே என்றில்லாமல், ஒட்டுமொத்த பாகிஸ்தான் மக்களுக்கும் என்பது நீதியாகாது. இந்தியாவிலும் காஷ்மீர் மக்களை பாதுகாப்புப் படை துன்புறுத்துவதையும் ஏற்க முடியாது. காஷ்மீர் முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி இனிமேல் இம்மாதிரியான அசம்பாவிதம் ஏதும் நடக்காத அளவுக்கு மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.

ந.கோவிந்தராஜன், ஸ்ரீமுஷ்ணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி கோவை தெற்கு: வானதி சீனிவாசன் பெருமிதம்

சிட்னி: துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவரும் ஒருவர்!

டிசம்பரில் ரூ. 17,955 கோடி பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள்!

காவிரி ஆற்றில் மூழ்கிய தாத்தா பேரன் உயிரிழப்பு

தில்லியில் நலிவடையும் காற்றின் தரம்..!

SCROLL FOR NEXT