நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து ஒன்றாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

செ.குளோரியான்

ஒரு நாயகமாய் ஓட உலகுஉடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர், சிதைகிய பானையர்,
பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்,
திருநாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்து உய்ம்மினோ.

மொத்த உலகுக்கும் தலைவனாக ஆள்கிற அரசர்கள்கூட, என்றைக்கேனும் வறுமை நிலையை அடையக்கூடும், அப்போது கருத்த நாய்கள் அவர்களுடைய கால்களைக் கவ்வும், கையில் இருக்கும் பானை உடைந்து சிதையும், அவர்கள் பிச்சையெடுத்து உண்பதை உலகமே பார்க்கும், ஆகவே, இந்த நிலையற்ற தன்மையை உணருங்கள், திருநாரயணனின் திருவடிகளை உடனே சிந்தித்து உய்யுங்கள்.

பாடல் - 2

உய்ம்மின் திறைகொணர்ந்து என்று உலகு ஆண்டவர், இம்மையே
தம்மின் சுவை மடவாரைப் பிறர்கொள்ளத் தாம் விட்டு
வெம் மின் ஒளி வெயில் கானகம் போய்க் குமை தின்பர்கள்,
செம் மின் முடித் திருமாலை விரைந்து அடி சேர்மினோ.

அரசர்கள் தங்களுக்குக் கீழே உள்ள சிற்றரசர்களைப் பார்த்து, ‘நீங்கள் வாழ வேண்டுமென்றால், எனக்குக் கப்பம் கட்டுங்கள்’ என்று சொல்வார்கள், அந்த அளவுக்குப் பெருமையுடன் உலகை ஆண்டவர்கள்கூட, என்றைக்கேனும் வறுமை நிலையை அடையக்கூடும். அப்போது, அவர்களுக்கு அதுவரை இன்பம் தந்த பெண்களையெல்லாம் பிறர் கைப்பற்றிக்கொள்வார்கள், அந்த முன்னாள் அரசர்கள் வெம்மையான, மின்னொளி போன்ற வெயில் பரவுகிற காட்டுக்குச் சென்று திண்டாடுவார்கள், ஆகவே, இந்த நிலையற்ற தன்மையை உணருங்கள், சிறந்த மின்னல் போன்ற திருமுடியைக்கொண்ட திருமாலை விரைவாக வணங்குங்கள், அவனது திருவடிகளைச் சேருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT