நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

செ.குளோரியான்


பாடல் - 3

கூடும்கொல் வைகலும் கோவிந்தனை, மது
சூதனை, கோள் அரியை
ஆடும் பறவைமிசைக் கண்டு கைதொழுது
அன்றி அவன் உறையும்
பாடும் பெரும்புகழ் நான்மறை, வேள்வி ஐந்து,
ஆறு அங்கம் பன்னினர் வாழ்
நீடுபொழில் திருவாறன்விளை தொழ
வாய்க்கும்கொல் நிச்சலுமே?

கோவிந்தனை, மதுசூதனனை, நரசிம்மரை வெற்றியையுடைய கருடன்மேலே கண்டு, கைதொழுது தினந்தோறும் வணங்கவேண்டும், இந்த பாக்கியம் எனக்குக் கிடைக்குமா? அத்துடன், அவர் உறைகிற திருத்தலம், பாடுகின்ற சிறந்த புகழையுடைய நான்கு வேதங்கள், ஐந்து வேள்விகள், ஆறு அங்கங்களை நன்கு கற்றவர்கள் வாழ்கிற, நீண்ட சோலைகளால் சூழப்பட்ட திருவாறன்விளைக்குச் சென்று அவரை எப்போதும் வணங்கிக்கொண்டே இருக்கவேண்டும், இந்த வரம்
எனக்குக் கிடைக்குமா?

***

பாடல் - 4

வாய்க்கும்கொல் நிச்சலும் எப்பொழுதும்
மனத்து ஈங்கு நினைக்கப் பெற
வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்
வயல் சூழ் திருவாறன்விளை
வாய்க்கும் பெரும் புகழ் மூ உலகு
ஈசன், வடமதுரைப் பிறந்த
வாய்க்கும் மணி நிறக் கண்ணபிரான்தன்
மலர் அடிப் போதுகளே?

செழித்து வளர்ந்த கரும்பும், பெரிய செந்நெல்லும் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திருவாறன்விளையிலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், சிறந்த, மிகுந்த புகழையுடையவர், மூன்று உலகங்களுக்கும் இறைவர், வடமதுரையிலே பிறந்த, நாம் அனுபவிக்கத்தக்க மணிநிறக் கண்ணபிரான், அவருடைய மலர்போன்ற திருவடிகளை இங்கிருந்தபடி எப்போதும் நினைக்கும்
பாக்கியம் கிடைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

SCROLL FOR NEXT