நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 7, 8

செ.குளோரியான்


பாடல் - 7

இறந்ததும் நீயே, எதிர்ந்ததும் நீயே,
              நிகழ்வதோ நீ, இன்னே ஆனால்
சிறந்த நின் தன்மை அது, இது, உது என்ற
            அறிவு ஒன்றும் சங்கிப்பன் வினையேன்,
கறந்தபால் நெய்யே, நெய்யின் இன் சுவையே,
            கடலினுள் அமுதமே, அமுதில்
பிறந்த இன் சுவையே, சுவையது பயனே,
            பின்னை தோள் மணந்த பேராயா.

கறந்த பாலே, நெய்யே, நெய்யின் இனிய சுவையே, கடலினுள் பிறந்த அமுதே, அமுதிலே பிறந்த இனிய சுவையே, சுவையாலே கிடைக்கும் ஆனந்தமே, நப்பின்னையின் தோள்களைத் தழுவிய பேராயனே, இதற்குமுன் இங்கே வாழ்ந்தவர்கள், இனி வாழப்போகிறவர்கள், இப்போது வாழ்கிறவர்கள் என எல்லாருமே நீ உண்டாக்கியவர்கள்தான், தொலைவில் உள்ளவை, அருகில் உள்ளவை, நடுவில் உள்ளவை ஆகிய அனைத்தும் சிறந்த உன்னுடைய தன்மைகள்தான், தீவினைகளைப் புரிந்தவனான நான், இதனை அறியாமல் சந்தேகம் கொள்கிறேனே.

***

பாடல் - 8

மணந்த பேராயா, மாயத்தால் முழுதும்
           வல்வினையேனை ஈர்கின்ற
குணங்களை உடையாய், அசுரர், வன்
         கையர் கூற்றமே, கொடிய புள் உயர்த்தாய்,
பணங்கள் ஆயிரமும் உடைய பைந்நாகப்
         பள்ளியாய், பாற்கடல் சேர்ப்பா,
வணங்கும் ஆறு அறியேன், மனமும் வாசகமும்
        செய்கையும் யானும் நீதானே.

நப்பின்னையை மணந்த பேராயனே, வலிய வினைகளைச் செய்தவனான என்னை மாயத்தாலே முழுவதுமாக வருத்துகின்ற குணங்களைக்கொண்டவனே, அசுரர்கள், வலிமையான வஞ்சகர்களுக்கு எமனே, கொடிய கருடப்பறவையைக் கொடியில் கொண்டு உயர்த்தியவனே, ஆயிரம் படங்களையுடைய ஆதிசேஷனாகிய நாகத்தைப் படுக்கையாகக் கொண்டவனே, பாற்கடலிலே சேர்ந்திருப்பவனே, என்னுடைய சிந்தனை, சொல், செயல், நான் அனைத்தும் நீயே, ஆகவே, உன்னை வணங்கும் முறையை நான் அறியேன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 9-இல் விஜயகாந்துக்கு பத்மபூஷண் விருது: பிரேமலதா

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ வாராகி அம்மன்...

ஆழ்வாா்கள் தமிழரங்கம் ஆறாம் ஆண்டு விழா

மாட்டுக் கொட்டகை எரிந்து சேதம்

முஸ்லிம்கள் ஹஜ் பயணத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: ஆந்திரத்தில் பாஜக கூட்டணி வாக்குறுதி

SCROLL FOR NEXT