பரிகாரத் தலங்கள்

வினைப் பயன்கள் நம்மைப் பற்றாது இருக்க தேனுபுரீஸ்வரர் கோவில், பட்டீச்சரம்

என்.எஸ். நாராயணசாமி

நாம் கடந்த வாரம், வினைப் பயன்கள் நம்மைப் பற்றாது இருக்க திருஆப்பனூர் என்ற தலத்தைப் பற்றி பார்த்தோம். இவ்வாரம் மற்றுமொரு சிவஸ்தலத்தைப் பற்றி அறிந்துகொள்வோம். பாடல் பெற்ற காவிரி தென்கரைத் சிவஸ்தலங்கள் வரிசையில் 23-வது தலமாக இருப்பது திருபட்டீச்சரம். இந்நாளில் இத்தலம் பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தல இறைவனை வழிபடுவர்களுக்கு வினைப் பயன்கள் பற்றாது என்று சம்பந்தர் தனது பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். தேவலோகப் பசுவான காமதேனுவின் புதல்வி பட்டி என்ற பசு, இத்தல இறைவனை பூஜித்த காரணத்தால் இத்தலம் பட்டீச்சரம் என்று பெயர் பெற்றது.

இறைவன் பெயர்: தேனுபுரீஸ்வரர்

இறைவி பெயர்: ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீபல்வளைநாயகி

இத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று உள்ளது. 

எப்படிப் போவது

கும்பகோணத்தில் இருந்து தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் பட்டீஸ்வரம் இருக்கிறது. சுவாமிமலை முருகன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. பட்டீஸ்வரம் தேனுபுரீசுவரர் ஆலயத்துக்கு அருகில் திருசத்திமுற்றம் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணம் - ஆவூர் சாலை வழியாக இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோவில்
பட்டீஸ்வரம் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் - 612 703.

இவ்வாலயம், தினமும் காலை 6 முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இவ்வாலயம் கிழக்கு மேற்காக 650 அடி நீளமும், தெற்கு வடக்காக 295 அடி நீளமும் உடையது. 5 பெரிய உயரமான கோபுரங்களும் 3 பிராகாரங்களும் உடையது. பிரதான கோபுரம் 7 நிலைகளையும் மற்ற கோபுரங்கள் 5 நிலைகளையும் உடையன. பட்டீஸ்வரர் கோயிலில் கிழக்கு வாயில், தெற்கு வாயில், வடக்கு வாயில் ஆகிய மூன்று வாயில்கள் பயன்பாட்டில் உள்ளன. 

கிழக்கு வாயிலின் உள்ள ராஜகோபுரத்தின் வழியே வந்தால், நந்தியைக் கடந்து உள்ளே பட்டீஸ்வரர் கோயிலுக்கு நேரடியாக வரலாம். உள்ளே செல்லும்போது, இடதுபுறம் துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. தெற்கு கோபுர வாயிலின் வழியே வந்தால், முதலில் கோயில் குளத்தைக் காணமுடியும். வடக்கு கோபுர வாயிலின் வழியே கோபுரத்தைக் கடந்து உள்ளே வந்தால், துர்க்கையம்மன் சன்னதியைக் காணமுடியும். கோவிலின் முதல் பிராகாரத்தில் உள்ள நடு மண்டபத்தில் மூலவர் பட்டீசுவரர் சந்நிதி இருக்கிறது. வெளியில் சோமஸ்கந்தரும், சுற்றிலும் சப்த கன்னிகைகள், மகாலிங்கம், ராமலிங்கம், லக்ஷ்மி, சண்டிகேசுவரர், நடராஜர், சூரியன், ரேணுகாதேவி, சுவர்ண விநாயகர் மற்றும் நவக்கிரகங்கள் சந்நிதிகள் உள்ளன. 

அம்மன் சந்நிதியில் உள்ள மண்டபம் கலையம்சம் வாய்ந்தது. இம்மண்டத் தூண்களில் உள்ள யாளிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் நடுவில் மேலே கல்லால் ஆன ஊஞ்சல் சங்கிலி உள்ளது. ஒரே கல்லால் ஆன சக்கரம், சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கலையம்சம் பொருந்திய பல சிற்ப வேலைப்பாடுகளையும் காணலாம். இத்தலத்தில் தனி சந்நிதியில் அருள் வழங்கும் பைரவர் சந்நிதியும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தலத்தின் மற்ற சிறப்புகள் 

பராசக்தி, தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர, இறைவன் பராசக்தியின் தவத்துக்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம்.

விஸ்வாமித்திர முனிவர், காயத்திரி சித்திக்கப்பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது.

வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை, ராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடிதீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து, அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக்கொண்டார். இத்தலத்தில் ராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் ராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது.

மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம், இத்தலத்திலுள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கியது.

இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன. ஞானசம்பந்தர் முத்துப் பந்தலில் பட்டீஸ்வரம் எழுந்தருளும்போது இறைவன் அதை நேரில் கண்டு மகிழவேண்டி, அவரின் கட்டளைப்படி நந்திகள் விலகியிருக்கின்றன என்று கூறுவர். திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருசத்திமுற்றம் ஆகிய தலங்களிலுள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீஸ்வரம் வந்த திருஞானசம்பந்தருக்கு, வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து, அதன் குடை நிழலில் சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும்போது, நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம்பெருமானை விலகி இருக்கச்சொல்லி அருளிய சிறப்புடையது.

வெளிப்பிராகாரத்தில், வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. பட்டீஸ்வரம் கோவில் வடக்கு வாசலில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்தத் துர்க்கை. சோழர்கள் காலத்துக்குப் பிறகு இந்தத் துர்க்கையை அங்கிருந்து கொண்டுவந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். 

பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகு கால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாள்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர். துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள்பாலிக்கிறாள். துர்க்கை அம்மன், மகிஷன் தலை மீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாக, எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள்.

காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்ம வாகனம் வலப்புறம் நோக்கியதாகக் காணப்படும். ஆனால், சாந்தசொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்ம வாகனம் இடப்புறம் பார்த்து அமைந்துள்ளது. அபய கரத்துடன் சங்கு, சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றைத் தாங்கி அருள்பாலிக்கிறாள். இத்தலத்திலுள்ள துர்க்கை அம்மனை வழிபடுவதால் ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும், திருமணத் தடை விலகும், எலுமிச்சம்பழ மாலை சாற்றி வேண்டிக்கொள்வதன் மூலம் தீராத நோய்களும் தீரும். எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

கோவில் திருவிழாக்கள் 
விசாக விழா

வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் காலையில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் ஊர்வலமாகப் புறப்பட்டு திருமலைராஜன் ஆற்றுக்குச் சென்று தீர்த்தம் கொடுத்து அங்கிருந்து இரவில் மூர்த்திகள் விமானங்களில் புறப்பட்டுக் காட்சி கொடுத்து ஆலயத்துக்கு வந்து சேரும்.

முத்துப்பந்தல் விழா

திருஞானசம்பந்தருக்கு, சிவபெருமான் பூதகணங்கள் மூலம் முத்துப்பந்தல் அளிக்கும் விழா ஆனி மாதம் முதல் தேதியில் நடைபெறும். இத்தலத்தின் சிறப்பு விழா இதுவேயாகும்.

மார்கழி விழா

மார்கழி அமாவாசை நாளில் பஞ்ச மூர்த்திகள் பல வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வந்து கோடி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுப்பார்கள். ராவணன் மற்றும் வாலியைக் கொன்றதால் ராமருக்கு ஏற்பட்ட சாயஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற ஐதீகத்தின் காரணமாக இவ்விழா நடைபெறுகிறது.

திருஞானசம்பந்தர் பாடியருளிய இத்தலத்துக்கான இப்பதிகம் மூன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இப்பதிகத்தின் முதல் பாடலில்,

‘கூட்டுபொழில் சூழ்பழைசையுள் மாட 
மழபாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்’ 

என்று குறிப்பிட்டதால், இத்தலத்துக்குப் பண்டைநாளில் மழபாடி என்ற பெயர் இருந்ததாகத் தெரிகின்றது. (காவிரி வடகரைத் தலமான மழபாடி என்பது வேறு தலம்). 
சம்பந்தர் இப்பாடலில், இவ்வாலயத்து இறைவனை நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில், மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில், திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் என்று குறிப்பிடுகிறார். நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப் போக்கி முத்திநெறி அருள வல்லவர் என்று இத்தல இறைவனைப் போற்றுகிறார். மிக்க புகழையுடைய திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும் என்றும் குறிப்பிடுகிறார். இத்தல இறைவனின் திருவடிகளை உள்ளம் ஒன்றித் தொழுபவர்களை வினையால் வரும் துன்பம் சாராது என்று மற்றொரு பாடலில் குறிப்பிடுகிறார்.

8-வது பாடலில், திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலைத் தொழுது வணங்குவார்களின் வினை முழுவதும் நீங்பி, இனிப் பிறப்பும், இறப்பும் இல்லாமல் அவர்கள் சிவஞானம் பெறுதலால் விண்ணுலகத்தை எளிதில் அடைவர் என்று கூறுகிறார். இவ்வளவு சிறப்பு பெற்ற பட்டீஸ்வரம் இறைவன் தேனுபுரீஸ்வரரை சென்று வணங்கி நற்பயன்களைப் பெறுங்கள். 

பாடன்மறை சூடன்மதி பல்வளையோர் பாகமதில்                                                 மூன்றோர்கணையாற்
கூடஎரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாட மழபாடியுறை பட்டிசர மேயகடி கட்டர வினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டி வினை வீடுமவரே.

நீரின்மலி புன்சடையர் நீளரவு கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது ஏந்தியுடை கோவணமும் மானின்உரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள் காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர மேத்த வினை பற்று அழியுமே.

காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமணம் நாறு பழையாறை மழ பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போற்பெருகி விண்ணுலகம்                                         ஆளுமவரே.

கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ்                                             செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட ஆடவல பால்மதியினான்
மண்ணின்மிசை நேரில்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழும்இமை யோரொடுட னாதலது                                             மேவலெளிதே.

மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கஅரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை அஞ்சவரு                                                 வெள்விடையினான்
உருவமெரி கழல்கள்தொழ உள்ள ம் உடையாரை அடையா                                         வினைகளே.

மறையின்ஒலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டம்அமர் பட்டிசரம் மேயபனிகூர்
பிறையினொடு மருவியதோர் சடையினிடை யேற்றபுனல்                                         தோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையின் ஏத்துமவர் தீத்தொழில்கள் இல்லர் மிகவே.

பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்
துறவியெனும் உள்ளமுடை யார்கள்கொடி வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவவரே.

நேசமிகு தோள்வலவ னாகியிறை வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலின் நண்ணலெளி தாம் அமரர் விண்ணுலகமே.

தூயமல ரானும்நெடி யானும்அறி யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி வாரணிகொள் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தஎளி தாகுநல மேலுலகமே.

தடுக்கினையி டுக்கிமட வார்களிடு பிண்டமது வுண்டுழல்தருங்
கடுப்பொடியு டற்கயவர் கத்துமொழி காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல்வ யல்கொள்மழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர மேத்த வினை பற்று அறுதலே.

மந்தமலி சோலைமழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி ஞானசம் பந்தன்அணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர் வினை நிற்பது இலவே.

சம்பந்தர் அருளிய பதிகம் - பாடியவர் மதுரை மு.முத்துக்குமரன் ஓதுவார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT