தினம் ஒரு தேவாரம்

49. பண்காட்டி படியாய - பாடல் 8

என். வெங்கடேஸ்வரன்

பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள்
சிட்டன் ஆதி என்று சிந்தை செய்யவே
நட்ட மூர்த்தி ஞானச் சுடராய் நின்ற
அட்டமூர்த்தி தன் வெண்காடு அடை நெஞ்சே
 

விளக்கம்

பட்டம் = நெற்றியில் இடும் அணிகலன். இண்டை = ஒரு வகை முள்மலர். சிட்டன் = மேலானவன், ச்ரேஷ்டன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. அட்ட மூர்த்தி = நிலம்.

நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள், சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு சுடர்கள் மற்றும் உலகிலுள்ள அனைத்து உயிர்கள் ஆகிய எட்டு பொருட்களில் இணைந்து இருக்கும் தன்மை அட்டமூர்த்தி என்று குறிக்கப்படுகின்றது.

அடியார்களை பத்தர் என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பத்தர் என்றால்  பத்து குணங்களை உடையவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். சிவனது அடியார்கள் பத்து புற குணங்களையும் பத்து அக குணங்களையும் உடையவர்களாக இருக்க  வேண்டும் என்று கூறுவார்கள். பத்து புற குணங்கள், திருநீறும் உருத்திராக்கமும் பக்தியுடன் தரித்தல், சிவபெருமானை புகழ்ந்து பாடுதல், சிவபிரானின் திருநாமங்களை ஓதுதல், சிவபூசனை புரிதல், சிவபுண்ணியங்கள் செய்தல், சிவபுராணங்களையும் சிவச்சரிதைகளையும் கேட்டல், சிவாலய வழிபாடு செய்தல், சிவனடியார்களை வணங்குதல், சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல், சிவனடியார்கள் இல்லங்களில் அன்றி வேறிடத்தில் அன்னம் உட்கொள்ளாது இருத்தல் ஆகும். பத்து அக குணங்கள், சிவபிரானின் புகழைக் கேட்கும்போது கண்டம் விம்முதல், நாக்கு தழுதழுத்தல், உதடுகள் துடித்தல், உடம்பு குலுங்குதல், மயிர்ப்புளகம் கொள்ளுதல், உடல் வியர்த்தல், சொல் எழாமல் இருத்தல், கசிந்திருகி கண்ணீர் பெருக்குதல், வாய் விட்டு அழுதல், மெய்ம்மறத்தல் ஆகும்.

பொழிப்புரை

பெருமானுக்கு பட்டம் என்று அழைக்கப்படும் நெற்றியில் அணியும் அணிகலனும் இண்டை மலர்களும் அணிவித்து வணங்கி வழிபடும் அடியார்கள், பெருமானை அனைவர்க்கும் மேலானவன் என்றும், அனைவர்க்கும் ஆதியானவன் என்றும் போற்றி வழிபடுகின்றார்கள். அவ்வாறு வழிபடப்படும் இறைவன் நடமாடும் மூர்த்தியாகவும், ஞான மூர்த்தியாகவும், அட்ட மூர்த்தியாகவும் விளங்குகின்றான். அவன்தான் திருவெண்காடு தலத்தில் உறைகின்றான். நெஞ்சமே, நீ அங்கு சென்று அவனை வணங்கி வாழ்வினில் மேன்மை அடைவாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்ணச்சநல்லூரில் வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு பயிற்சி

பெருங்களூா் உருமநாதா் கோயில் தோ்த் திருவிழா

எசனை காட்டுமாரியம்மன் கோயில் தேரோட்டம்

புகழூா் நகராட்சியில் ரூ.1.58 கோடி வரி வசூல்

தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கு தபால் வாக்குகள் பிரிப்பு: பதிவு செய்யப்பட்டது- 8,827; பதிவு செய்யப்படாதது-21,890

SCROLL FOR NEXT