தினம் ஒரு தேவாரம்

61. கடலகம் ஏழினோடும் - பாடல் 1

என். வெங்கடேஸ்வரன்

(ஆப்பாடி – நேரிசை)

முன்னுரை
குடந்தை திருப்பனந்தாள் சாலையில் உள்ள இந்த தலம் ஆடுதுறைக்கு பதினோறு கி.மீ. அருகில் உள்ளது. சண்டீசர் இந்த இடத்தில் மாடுகள் மேய்த்ததால் ஆப்பாடி என்ற பெயர் வந்தது. அப்பர் பிரான் இந்த தலம் சென்றதாக, பெரிய புராணப் பாடல் குறிப்பு ஏதுமில்லை. செம்பொன்பள்ளி தலம் சென்ற அப்பர் பிரான், அருகில் இருந்த பல தலங்களுக்குச் சென்றபோது, இந்த தலமும் சென்றிருக்க வேண்டும் என்று பெரியபுராண உரை ஆசிரியர்கள் கருதுகின்றார்கள்.

பாடல் 1

கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்த விண்ணும்
உடலகத்து உயிரும் பாரும் ஒள்ளழலாகி நின்று
தடமலர்க் கந்த மாலை தண்மதி பகலுமாகி
மடலவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே
 

விளக்கம்

பவனம் = காற்று. ஆகாயத்தின் பண்பாக கருதப்படுவது ஓசை. தோற்றத்திற்கு ஆதாரமாக அமைந்தது நாதம். நாதத்திலிருந்து வெட்ட வெளியாகிய ஆகாயம் தோன்றியது. ஆகாயத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து பூமியும் தோன்றின. எனவே ஐந்து பூதங்களிலும் ஆகாயம் கலந்திருப்பதை நாம் உணரலாம். இந்த செய்தியைத்தான், அனைத்து பூதங்களிலும் ஆகாயம் கலந்திருக்கும் தன்மையை, கலந்த விண்ணும் என்ற தொடர் மூலம் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தடமலர் = பெரிய மலர்கள்.

பொழிப்புரை

உலகத்தைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களாகவும், காற்றாகவும், அனைத்து பூதங்களின் அடிப்படையாக உள்ள ஆகாயமாகவும், அனைத்து உடல்களிலும் இருக்கும் உயிராகவும், நிலமாகவும், ஒளி விட்டு மிளிரும் தீயாகவும், பெரிய மலர்கள் நறுமணம் வீசும் மாலைக் காலமாகவும், குளிர்ந்த சந்திரன் ஒளி வீசும் இரவுமாகவும், சூரியன் ஒளி வீசும் சூரியனாகவும், நிலைபெற்று நிற்கும் ஆப்பாடி இறைவனார், இதழ் விரிகின்ற கொன்றை மலரைச் சூடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT