தினம் ஒரு தேவாரம்

114. உரையினில் வந்த பாவம் - பாடல் 2

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 2:

    ஊன் அடைகின்ற குற்றம் முதலாகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும்
    வான் அடைகின்ற வெள்ளை மதி சூடு சென்னி விதியான வேத விகிர்தன்
    கானிடை ஆடி பூதப் படையான் இயங்கு விடையான் இலங்கு முடிமேல்
    தேனடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திருநாரையூர் கை தொழவே

விளக்கம்:

முந்தைய பாடலில் மனம் மொழி மெய்களால் விளையும் பாவங்களுக்கு காரணமாகிய  குற்றம் பிணி நோய் ஆகிய மூன்றும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றன. உயிரின் குற்றமே மலங்களுடன் பிணைந்து இருப்பதே. அந்த மலங்களின் சேர்க்கையால் ஏற்படும் வினைகளின் காரணமாகத் தானே பிறவிகள் எழுகின்றன. பிறப்பு எடுத்த பின்னர், பழைய வினைகளை நுகரும் நாம் மேலும் பல குற்றங்களை செய்து பாவ வினைகளை சேர்த்துக் கொள்கின்றோம். இந்த வினைகளை தீர்த்துக் கொண்டு தனது நிலையினை உயர்த்திக் கொள்ளவே உயிர் விரும்புகின்றது. அந்த விருப்பத்தினை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது என்பதை சம்பந்தர் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார். ஒருங்கும்=கெடும்; ஊன்=உடல்; இயங்கு விடையான்=விடையின் மீது அமர்ந்து பல இடங்கள் செல்பவன். விதி=வாழ்க்கை நெறிமுறைகள்; ஆடி என்ற சொல் இங்கே பெயர்ச் சொல்லாக வந்துள்ளது. ஆடி=ஆடுபவன்; 

பொழிப்புரை:

உயர்ந்த வானில் உலவும் வெள்ளை மதியினைத் தனது தலையில் சூடியவனும் வாழ்க்கை நெறிமுறைகளை எடுத்துரைக்கும் வேதங்களை அருளி அதனில் வல்லவனாக திகழ்பவனும். காட்டில் நடம் ஆடுபவனும், பூத கணங்களைத் தனது படையாக உடையவனும், இடபத்தை வாகனமாகக் கொண்டு பல இடங்கள் செல்பவனும், ரீங்காரம் இட்டுக் கொண்டு தேனைத் தேடிக் கொண்டு வரும் வண்டுகள் வந்தடையும் மலர்கள் சூடிய சடையினை உடையவனும், நமக்குத் தலைவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருநாரையூர் தலத்தினை கை தொழுதால், உயிர்கள் மீண்டும் மீண்டும் உடல்களை சென்று அடையும் குற்றமும், பிறவி எடுப்பதால் உயிர்களுக்கு மனம் மொழி மெய்களால் சேர்கின்ற தீய வினைகளும் முற்றிலும் அழிந்து விடும்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

இன்று அட்சய திருதியை: தங்கம் விலை ரூ.720 உயர்வு!

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கொன்று புதைப்பு

நொய்டா: தொழிலதிபரின் மகன் கொலை வழக்கில் மூவா் கைது

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை எதிா்ப்பு

SCROLL FOR NEXT