தினம் ஒரு தேவாரம்

126. இயலிசை எனும் பொருளின் - பாடல் 7

என். வெங்கடேஸ்வரன்


பாடல் 7:

    அடியவர் தொழுது எழ அமரர் ஏத்தச்
    செடிய வல்வினை தீர்ப்பவனே
    துடி இடை அகல் அல்குல் தூமொழியைப் 
    பொடியணி மார்பு உற புல்கினனே
    புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலிந்நகர்
    நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே

விளக்கம்:

செடிய=கொடுமையான, துடி இடை=துடி எனப்படும் இசைக்கருவியின் நடுவினைப் போன்று மெலிந்து காணப்படும் இடையினை உடையவள்; புகர் ஏறு=புள்ளிகளை உடைய எருது; தொழுது எழுதல் என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து வணங்கிய பின்னர் அடியார்கள் எழுவது இங்கே உணர்த்தப் படுகின்றது.

பொழிப்புரை:

அடியார்கள் உன்னைத் தரையில் விழுந்து தொழுது வணங்கவும் தேவர்கள் உன்னைப் புகழ்ந்து வணங்கிப் போற்றவும் விளங்கும் பெருமானாகிய நீ, அவர்களை பிணித்திருக்கும் வலிமை வாய்ந்த கொடிய வினைகளைத் தீர்க்கின்றாய். துடி இசைக்கருவியின் நடுவினைப் போன்று மெலிந்த இடையினையும், அதன் மேலும் கீழும் அகன்ற பாகங்களை உடையவளும், தூய்மையான சொற்களைப் பேசுபவளும் ஆகிய உமை அன்னையை, திருநீறு அணிந்து உனது மார்பினில் பொருந்தும் வண்ணம் தழுவும் பெருமானே, புண்ணியனே, தூய்மையே வடிவமாக இருப்பவனே, புள்ளிகள் கொண்ட எருதினை வாகனமாக உடையவனே, நீ உனது இருப்பிடமாக கருதி புகலி நகரில் பொருந்தி உறைகின்றாய். உனது திருவடிகளைப் புகழ்ந்து உன்னை வணங்கும் அடியார்களை வினைகள் நெருங்காது விலகிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT