முகப்பு
செய்திகள்

3-ஆவது ஆட்டம்: முன்னிலை யாருக்கு?: சிட்னியில் இந்தியா - ஆஸி. இன்று முதல் பலப்பரீட்சை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம் சிட்னி நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது. 

Updated On : 7 ஜனவரி 2021, 4:04 am IST
பகிர்:

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம் சிட்னி நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது. 

4 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளதால், தொடரில் முன்னிலை பெறுவதற்கான முயற்சியுடன் 3-ஆவது ஆட்டத்தில் இரு அணிகளும் களம் காண்கின்றன. 

இந்திய அணியைப் பொருத்தவரை கேப்டன் கோலி, ரோஹித் சர்மா போன்ற வலுவான வீரர்கள் இல்லாத நிலையிலும் வெற்றியைப் பதிவு செய்ய இயலும் என ரஹானே தலைமையிலான இந்திய அணி மெல்போர்னில் நிரூபித்தது. தற்போது ரோஹித் சர்மா அணிக்குத் திரும்பியிருப்பது கூடுதல் பலம். உமேஷ் யாதவுக்குப் பதிலாக அணியில் இணைந்துள்ள இளம் வீரர் நவ்தீப் சைனி தனது முதல் சர்வதேச டெஸ்டில் தடம் பதிக்கிறார். 

Advertisement

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான சிட்னி மைதானத்தில் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் கூட்டணி இந்திய அணிக்கு நல்லதொரு தொடக்கத்தை அளிக்கும் பட்சத்தில், தடுமாற்றமாக ஆடி வரும் புஜாரா சற்று நிதானமாக தனது வழக்கமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்த இயலும். 

மெல்போர்ன் டெஸ்டில் சதம் விளாசி அணியின் ஸ்கோரை ஸ்திரப்படுத்திய ரஹானே, சிட்னியிலும் தவறாமல் தனது தடத்தை பதிப்பார் என எதிர்பார்க்கலாம். காயம் காரணமாக லோகேஷ் ராகுல் வெளியேறியதால், மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ள ஹனுமா விஹாரி அதை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. 

ஜஸ்பிரீத் பும்ரா வேகத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலிலும் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசையை சரிக்கத் தயாராக உள்ளனர். குறிப்பாக, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் சிட்னி ஆடுகளத்தில் அஸ்வின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணியினருக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. 

இந்திய அணியின் பெளலிங்கை தொடங்குவது இளம் வீரர்களான நவ்தீப் சைனி அல்லது முகமது சிராஜ் என யாராக இருந்தாலும், முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு நிகரான தரத்தை பந்துவீச்சில் வெளிப்படுத்தினால் மட்டுமே ஆஸ்திரேலிய அணியை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த இயலும். ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, பேட்டிங் வரிசை முதல் இரு டெஸ்டுகளில் பிரச்னைக்குரியதாகவே இருந்தது. ஸ்மித், வேட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஃபார்ம் இன்றி தவிக்கின்றனர். இந்நிலையில் டேவிட் வார்னர் இந்த ஆட்டத்தில் அணிக்குத் திரும்பியிருப்பது ஆஸ்திரேலியாவுக்கு பலமாகத் தெரிகிறது. 

எனினும், முழுமையாகத் தயாராகாத நிலையில் அவரை களத்தில் இறக்குவது ஆஸ்திரேலியாவுக்கு பாதிப்பாகவும் வாய்ப்புள்ளது. லபுசான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலிரு டெஸ்டுகளை தவறவிட்ட வில் புக்கோவ்ஸ்கி, சிட்னியின் மூலமாக முதல் முறையாக சர்வதேச டெஸ்டில் தடம் பதிக்கவுள்ளார். பெளலிங்கில் மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் நிச்சயம் பலம் காட்டுவார்கள். 


அஸ்வினும், ஜடேஜாவும் அணிக்கு பலம் 

பந்துவீசுவதற்கான அருமையான திறமைகளை அஸ்வின் ஏற்கெனவே கொண்டிருக்கிறார். ஆனாலும், புதிதாக கற்றுக்கொண்டு பெளலிங்கில் மாற்றங்கள் செய்வதற்கு முயற்சிப்பது அவரை மேலும் சிறந்த வீரராக மாற்றுகிறது. சிட்னி மற்றும் பிரிஸ்பேன் டெஸ்டுகளில் அணிக்காக அஸ்வின் சிறப்பாகச் செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம். 

அதேபோல், ஜடேஜாவும் ஒரு பேட்ஸ்மேனாக தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளார். இது அணியில் ஒரு சமநிலையை ஏற்படுத்தியுள்ளது. 7-ஆவது வீரராக களம் இறங்கியும் அணிக்குத் தேவையான ரன்களை ஸ்கோர் செய்ய இயலும் என்பது சிறப்பானதாகும். அத்துடன் ஃபீல்டிங்கில் அவர் சில அற்புதமான கேட்ச்கள் பிடிப்பதை அனைவருமே பார்த்திருக்கிறோம். 

ரோஹித் சர்மாவும் மிகச் சிறப்பாகத் தயாராகியிருக்கிறார். வலைப் பயிற்சியின்போது அருமையாக பேட்டிங் செய்தார். சிட்னி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானதாகும். எனவே, நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால், எல்லாம் சாதகமாக அமையும்.

 - அஜிங்க்ய ரஹானே (இந்திய கேப்டன்) 

வார்னரால் அணிக்கு சிறப்பு 

எந்தவொரு அணிக்கு எதிராக விளையாடினாலும் சரி, டேவிட் வார்னர் இருந்தால் எங்களது அணியின் சிறப்பு அதிகரிக்கும். அணிக்காக ரன்கள் ஸ்கோர் செய்வது, அணியினருக்கு ஊக்கம் அளிப்பது என வார்னர் அணியில் இருந்தால் தனி உத்வேகம் கிடைக்கும். பேட்டிங்கில் நிலையான தொடக்கத்தை அளிப்பவராக அவர் இருக்கிறார். 

வார்னரை அடுத்து லபுசான், ஸ்மித் ஆகியோர் நல்லதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அடுத்த வீரர்கள் வரும்போது எதிரணி பெளலர்கள் சோர்வடைந்திருப்பார்கள். இது சாதகமானதாகும். அதேபோல் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படும் பட்சத்தில் விளையாடுவதற்கான தயார் நிலையில் வில் புக்கோவ்ஸ்கி இருக்கிறார். கேமரூன் கிரீனும் சிறப்பாகச் செயல்படுவார். 
முன்னதாக, 4-ஆவது டெஸ்ட்டை பிரிஸ்பேனில் விளையாட இந்திய அணியினர் தயக்கம் காட்டுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானது, தொடரில் சற்று பதற்றத்தை அதிகரித்தது. ஏனெனில் உலகிலுள்ள சக்திவாய்ந்த கிரிக்கெட் வாரியங்களில் பிசிசிஐ-யும் ஒன்று. 

- டிம் பெய்ன் (ஆஸ்திரேலிய கேப்டன்)


ஆடுகளம் எப்படி?


3-ஆவது டெஸ்ட்டுக்காக சிட்னி மைதானத்தின் ஆடுகளம் அதிகமான புற்களுடன் கடினமான ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளதாக, மைதான பராமரிப்பாளர் ஆடம் லீவிஸ் கூறினார். 

"டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான மைதானம், ஆடுகளத்தை தயார் செய்வது மிகப்பெரிய பணியாகும். அதிலும் இந்த ஆண்டு சிக்கலான வானிலை நிலவுகிறது. இருந்தபோதும், இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் ஆட்டத்துக்காக புற்கள் நிரம்பிய கடினமானதாக இருக்கக் கூடிய நல்லதொரு ஆடுகளத்தை அமைத்துள்ளோம்' என்றார். 

கடைசியாக இந்த மைதானத்தில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா, அந்த டெஸ்ட் ஆட்டத்தில் 279 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அந்த ஒரு வெற்றி... 


சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே இந்தியா இதுவரை பதிவு செய்துள்ளது. 1978-இல் சுனில் காவஸ்கர் தலைமையிலான இந்திய அணி அந்த டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 


முதல் முறையாக "4-ஆவது நடுவராக' பெண்


சிட்னி டெஸ்டில் 4-ஆவது நடுவராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிளேர் போலோசாக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெண் ஒருவர் 4-ஆவது நடுவராக செயல்படுவது இது முதல் முறையாகும். 

சிட்னி டெஸ்டில் கள நடுவர்களாக பால் ரீஃபெல், பால் வில்சன் ஆகிய இருவரும், தொலைக்காட்சி நடுவராக புரூஸ் ஆக்ùஸன்ஃபோர்டும் செயல்பட இருக்கின்றனர். 4-ஆவது நடுவராக கிளேர் போலோசாக் பணியாற்ற, போட்டி நடுவராக டேவிட் பூன் செயல்படுகிறார். 

கிளேர் போலோசாக் ஏற்கெனவே, ஆடவருக்கான ஒருநாள் ஆட்டத்தில் நியமிக்கப்பட்ட முதல் பெண் கள நடுவர், ஆஸ்திரேலியாவில் ஆடவருக்கான "லிஸ்ட் ஏ' விளையாட்டில் நியமிக்கப்பட்ட முதல் பெண் 4-ஆவது நடுவர் ஆகிய பெருமைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். 

ஆட்டத்துக்கான புதிய பந்தை வழங்குவது, புதிய பெய்ல்ஸ்களை அளிப்பது, கள நடுவர்களுக்கான இளைப்பாறல் பானங்களை எடுத்து வருவது, லைட் மீட்டர்களின் பேட்டரிகளை சரிபார்ப்பது, மதிய உணவு மற்றும் தேநீர் இடைவேளைகளின்போது ஆடுகளத்தை சரிபார்ப்பது போன்றவை 4-ஆவது நடுவரின் பணியாகும். 

டெஸ்ட்டுக்கான ஐசிசி விதிகளின் படி, போட்டியை நடத்தும் கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் 4-ஆவது நடுவர் நியமிக்கப்படுகிறார். அவர் ஐசிசி நடுவர்களுக்கான சர்வதேச குழுவில் அங்கம் வகிப்பவராக இருக்கிறார்.

எதிர்பாராத சூழ்நிலைகளில் கள நடுவரின் பொறுப்புக்கு தொலைக்காட்சி நடுவர் செல்லும் பட்சத்தில், அவரது பொறுப்பை 4-ஆவது நடுவர் ஏற்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.