முகப்பு
விளையாட்டு

தேசிய கார் பந்தயம்: சரோஷ் கட்டாரியா வெற்றி

கிரேட்டர் நொய்டா, டிச.1: ஜே.கே.டயர்ஸ் தேசிய கார் சாம்பியன்ஷிப் போட்டியில் எல்ஜிபி ஃபார்முலா 4 பிரிவின் முதல் ரேஸில் கோவை வீரரும், வாலஸ் ஸ்போர்ட்ஸ் அணியைச் சேர்ந்தவருமான சரோஷ் கட்டாரியா வெற்றி பெற்றார்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:46 PM
பகிர்:

கிரேட்டர் நொய்டா, டிச.1: ஜே.கே.டயர்ஸ் தேசிய கார் சாம்பியன்ஷிப் போட்டியில் எல்ஜிபி ஃபார்முலா 4 பிரிவின் முதல் ரேஸில் கோவை வீரரும், வாலஸ் ஸ்போர்ட்ஸ் அணியைச் சேர்ந்தவருமான சரோஷ் கட்டாரியா வெற்றி பெற்றார்.

15ஆவது ஜே.கே.டயர்ஸ் தேசிய கார் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் 2 சுற்றுகள் கோவையிலும், அடுத்த 3 சுற்றுகள் சென்னையிலும் நடைபெற்றன. இப் போட்டியின் இறுதிச்சுற்று தில்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத்தா சர்வதேச கார் பந்தய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப் போட்டி இரு நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான சனிக்கிழமை நடைபெற்ற எல்.ஜி.பி.ஃபார்முலா 4 முதல் ரேஸில் முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட சரோஷ் கட்டாரியா 14 நிமிடம், 48 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்தார். எரம் ஸ்போர்ட்ஸ் அணி வீரர் திலிஜித் 2ஆவது இடத்தையும், சரண் விக்ரம் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்தியன் டூரிங் கார் முதல் ரேஸில் லீலா கிருஷ்ணன் (14 நிமிடம், 58 விநாடிகள்) முதலிடத்தையும், பாலா விஜய் 2ஆவது இடத்தையும், ராமநாராயணன் 3ஆவது இடத்தையும் பிடித்தனர். இந்தியன் ஜூனியர் டூரிங் கார் முதல் ரேஸில் ஃபாஹட் குட்டி (16 நிமிடம், 45 விநாடிகள்) முதலிடத்தையும், பெரோஸ் கான் 2ஆவது இடத்தையும், ஸ்ரீராம் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

ஆஸ்டன் ஹாரே வெற்றி: ஜே.கே.டயர்ஸ் ஆசிய சீரிஸ் போட்டியின் 6ஆவது மற்றும் இறுதிச்சுற்றின் முதல் ரேஸில் யூரோ இண்டர்நேஷனல் அணி வீரர் ஆஸ்டன் ஹாரே வெற்றி கண்டார். 10 சுற்றுகளைக் கொண்ட இந்த ரேஸில் 20 நிமிடம், 23 விநாடி, 383 மைக்ரோ விநாடிகளில் இலக்கை எட்டி அவர் முதலிடத்தைப் பிடித்தார். அதே அணியின் அகில் குஷ்லானி 2ஆவது இடத்தையும் (20 நிமிடம், 23 விநாடி, 571 மைக்ரோ விநாடிகள்) 2ஆவது இடத்தையும், மெரிட்டஸ் ஜி.பி. அணியின் வீரர் அஃபிக் இக்வான் (20 நிமிடம், 29 விநாடிகள், 89 மைக்ரோ விநாடிகள்) 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இந்த சுற்றின் 2ஆவது ரேஸிலும் ஆஸ்டன் ஹாரேவே (20 நிமிடம், 16 விநாடிகள்) முதலிடத்தைப் பிடித்தார்.

அஃபிக் இவான் 2ஆவது இடத்தையும், யூரோ இண்டர்நேஷனல் வீரர் ஆதித்யா படேல் 3ஆவது இடத்தையும் பிடித்தனர்.

இப் போட்டியின் முதல் சுற்று மலேசியாவின் செபாங் நகரிலும், அடுத்த 3 சுற்றுகள் முறையே பிரான்ஸ், பெல்ஜியம், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் நடைபெற்றன.

இந்தியாவில் ஃபார்முலா 1 நடைபெற்றபோது அதற்கு ஆதரவாக 5ஆவது சுற்று இதே புத்தா மைதானத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமையும் போட்டி நடைபெறுகிறது. இதன்முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.