பெங்களூரை வீழ்த்திய "நோ பால்'
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி கண்டது.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸýக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசிப் பந்தில் த்ரில் வெற்றி கண்டது.
ஆட்டத்தின் கடைசிப் பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா தூக்கியடித்த பந்தை ராம்பால் கேட்ச் பிடிக்க, சூப்பர் கிங்ஸ் தோற்றதாக நினைத்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்போது அந்த பந்தை நோ-பால் என அறிவித்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடுவர். இதையடுத்து சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
முதலில் பேட் செய்த பெங்களூர் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து ஒரு பந்து மீதமிருக்கையில் 166 ரன்கள் எடுத்தது.
Advertisement
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் அங்கித் ராஜ்புட்டுக்கு பதிலாக மோஹித் சர்மா சேர்க்கப்பட்டார். பெங்களூர் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. மோசஸ் ஹென்ரிக்ஸ், முத்தையா முரளிதரன், லோகேஷ்வர் ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டு, டேனியல் கிறிஸ்டியான், ராம்பால், சயீத் முகமது ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
கெயில் 4: டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த பெங்களூர் அணியில் ஆரம்பம் முதலே தடுமாறிய கெயில், கிறிஸ் மோரிஸ் வீசிய, ஆட்டத்தின் 2-வது ஓவரில் வைடு பாலை தேவையில்லாமல் அடிக்க முயன்று கீப்பர் தோனியிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு மயங்க் அகர்வாலுடன் இணைந்தார் கேப்டன் கோலி. இந்த ஜோடி நிதானமாக ஆடியதால் முதல் 5 ஓவர்களில் பெங்களூர் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் ஸ்ட்ரெய்ட் திசையில் பிரமாண்ட சிக்ஸரை விளாசிய மயங்க் அகர்வால், அடுத்த ஓவரில் ஸ்டெம்பிங் ஆனார்.
அவர் 24 ரன்கள் எடுத்தார்.
கோலி அரைசதம்: இதன்பிறகு களம்புகுந்த டிவில்லியர்ஸ் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். 47 ரன்கள் எடுத்திருந்தபோது பிராவோ கோட்டைவிட்ட கேட்ச்சால் தப்பிப் பிழைத்த கோலி, 43 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 47 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டிவில்லியர்ஸ் விளாசல்: பின்னர் வந்த கிறிஸ்டியான் 2 ரன்களிலும், ராம்பால் ரன் ஏதுமின்றியும் நடையைக் கட்டினர். எனினும் மறுமுனையில் தொடர்ந்து வேகமாக விளையாடிய டிவில்லியர்ஸ் மோரிஸ் வீசிய 19-வது ஓவரில் சிக்ஸர் அடித்து 26 பந்துகளில் அரைசதம் கண்டார். அதே ஓவரின் 4-வது பந்தில் டிவில்லியர்ஸ் அடித்த ஸ்வீப் ஷாட்டை அஸ்வின் கோட்டைவிட அது பவுண்டரியானது. கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்க, பெங்களூர் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 32 பந்துகளில் ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். அருண் கார்த்திக் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சூப்பர் கிங்ஸ் தரப்பில் கிறிஸ் மோரிஸ் 4 ஓவர்களில் 40 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பேட் செய்த சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய் 2, மைக் ஹசி 6 ரன்களில் ஆட்டமிழக்க, ரெய்னாவும், பத்ரிநாத்தும் ஜோடி சேர்ந்தனர். பத்ரிநாத் ஒரு ரன் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச்சை ஆர்.பி.சிங் கோட்டைவிட்டதால், அவர் தப்பிப் பிழைத்தார். ரெய்னா வேகமாக விளையாட, பத்ரிநாத் அவருக்கு பக்கபலமாக ரன் சேர்த்தார். இதனால் 9-வது சூப்பர் கிங்ஸ் 50 ரன்களை எட்டியது. தொடர்ந்து வேகமாக விளையாட முற்பட்ட ரெய்னா, 11-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்தார். ரெய்னா-பத்ரிநாத் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து சென்னை ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் களம்புகுந்தார் கேப்டன் தோனி. சூப்பர் கிங்ஸ் 78 ரன்களை எட்டியபோது பத்ரிநாத்தின் விக்கெட்டை இழந்தது. 29 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ரவீந்திர ஜடேஜா களம்புகுந்தார். தோனி இரு சிக்ஸர்களை விரட்டி அதிரடியாக விளையாட, கடைசி 3 ஓவர்களில் சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவைப்பட்டன. வினய் குமார் வீசிய 18-வது ஓவரில் 12 ரன்கள் எடுக்கப்பட்டன. இதனால் கடைசி ஓவர்களில் 29 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ராம்பால் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் தோனி ஆட்டமிழக்க, சூப்பர் கிங்ஸின் தோல்வி உறுதியானது. இதையடுத்து வந்த பிராவோ சிக்ஸர் உள்பட 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற 16 ரன்கள் எடுக்க
வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆர்.பி.சிங் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட ஜடேஜா, முதல் பந்தில் பவுண்டரியையும், அடுத்த பந்தில் சிக்ஸரையும் விரட்ட ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. கடைசிப் பந்தில் 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், ஜடேஜா அடித்த பந்து கேட்ச் ஆக, வெற்றிக் களிப்பில் பெங்களூர் கேப்டன் கோலி உள்ளிட்டோர் துள்ளிக் குதித்தபோது, நடுவர் நோ-பால் என சைகை காண்பிக்க பெங்களூர் அணியினர் அதிர்ச்சியில் உறைந்தனர். அதேநேரத்தில் சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வெற்றிக் களிப்பில் துள்ளிக்குதிக்க, மைதானமே மகிழ்ச்சியால் அதிர்ந்தது.
ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
ஸ்கோர் போர்டு
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விக்கெட் வீழ்ச்சி: 1-6 (கெய்ல்), 2-51 (அக்ரவால்), 3-133 (கோலி),
4-135 (கிறிஸ்டியன்), 5-138 (ராம்பால்), 6-165 (டிவில்லியர்ஸ்)
பந்து வீச்சு: திர்க் நேன்ஸ் 4-0-31-1, கிறிஸ் மோரிஸ் 4-0-40-3
மொஹித் சர்மா 2-0-13-0, அஸ்வின் 4-0-28-1,
ரவீந்திர ஜடேஜா 2-0-20-0, வேயன் பிராவே 4-0-32-1.
சென்னை சூப்பர் கிங்ஸ்
விக்கெட் வீழ்ச்சி: 1-4 (விஜய்), 2-10 (ஹசி), 3-66 (ரெய்னா),
4-78 (பத்ரிநாத்), 5-137 (தோனி), 6-146 (பிராவோ).
பந்து வீச்சு: ராம்பால் 4-0-31-3, ஆர்.பி.சிங் 3.5-0-41-0,
வினய் குமார் 4-0-36-1, கிறிஸ்டியான் 2-0-13-0,
முரளி கார்த்திக் 3-0-29-0, சையது முகமது 3-0-15-2.