நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய பிறகு மூலை முடுக்கெல்லாம் செஸ் விளையாடத் துவங்கிய இளம் விளையாட்டு வீரர்கள் பலர். தொழில் முறை வீரர்களாக உருவாகாமல் இப்போதும் நாட்டின் பல்வேறு இடங்களில் பொழுதுபோக்குக்காக விளையாடும் முதியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தியர்களின் விளையாட்டு சதுரங்கம். 64 கட்டங்களில் மூளையைக் கசக்கிப் பிழியும் இந்த விளையாட்டை இப்போது நாட்டில் பல ஆயிரம் பேர் விளையாடி வருகின்றனர். இதற்கெல்லாம் மூல காரணம் விஸ்வநாதன் ஆனந்த் என்பது தமிழகத்துக்குப் பெருமை.
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியின்போது நார்வேயின் இளம் வீரர் மேக்னஸ் கார்ல்ஸனிடம் தோல்வியடைந்தார் விஸ்வநாதன் ஆனந்த். தமிழக அரசே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை முன்னின்று நடத்தியதால், தமிழகம் முழுவதும் செஸ் விளையாடும் வீரர்களுக்குள் போட்டிகள் நடத்தப்பட்டன.
தமிழக அரசு செஸ் விளையாட்டைக் கட்டாயமாக ஆக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆண்டுதோறும் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தேர்வு செய்யப்படும் வீரர்கள் குறுமைய அளவில் விளையாட அனுப்பப்பட்டார்கள். குறுமைய அளவில் நடுவர்களாக நியமிக்கப்பட்ட பல ஆசிரியர்களுக்கு செஸ் விளையாட்டின் அடிப்படை விதிகள் கூடத் தெரியவில்லை.
கோவை மாவட்டத்தில் நடந்த குறுமையப் போட்டியில் மாணவர் ஒருவர், என்பாசன்ட் என்ற விதிப்படி காயை நகர்த்தினார். எதிரில் விளையாடிய மாணவருக்கு இவ் விதி தெரியவில்லை. நடுவராகப் பணியாற்றிய ஆசிரியருக்கும் இவ் விதி தெரியவில்லை. இவ் விதி தொடர்பாக யாரிடம் பேசுவது என்று யாருக்கும் தெரியவில்லை. இறுதியில் என்பாசன்ட் விதி சரியானதுதான் என கோவையில் செஸ் பயிற்சியாளர் ஒருவரிடம் கேட்ட பிறகு முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டது.
பொதுவாக, எந்த ஒரு செஸ் போட்டியிலும் பங்கேற்கும் வீரர்கள் எதிரி வீரர்களுடன் ஒருமுறை மட்டுமே மோதுவார். ஆனால், குறுமைய அளவில் நடக்கும் செஸ் விளையாட்டுப் போட்டிகளில் நடக்கும் மற்றொரு கேலிக் கூத்து, ஒரு வீரரை மற்றொரு வீரருடன் 2 அல்லது 3 முறை மோத விடுவதுதான். இதுகுறித்து செஸ் விளையாடும் மாணவர்கள் சொன்னாலும், சம்பந்தப்பட்ட விளையாட்டு ஆசிரியர்கள் கேட்பதில்லை. தங்களின் செஸ் குறித்த அறிவுத் திறன் மீது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு அவ்வளவு மரியாதை.
கோவை மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறு மைய விளையாட்டுப் போட்டிகளில் செஸ் போட்டியில் மேற்கண்ட பல்வேறு கேலிக் கூத்துகள் நடைபெறுகின்றன. செஸ் விளையாட்டை ஊக்கப்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சியின் பலனாக இப்போதுதான் பள்ளிகளில் செஸ்ஸின் அடிப்படை விதிகள் கற்றுத் தரப்படுகின்றன. இதே முயற்சி தொடர்ந்து நடைபெற்றால் ஒவ்வொரு குக்கிராமத்தில் இருந்தும் பல்வேறு சிறந்த வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு குழந்தையிடமும் உள்ள திறமைகளைக் கண்டறிந்து வெளிக் கொண்டு வருவதில்தான் வெளிநாடுகளுக்கும் நமக்கும் மிகப் பெரிய இடைவெளி உள்ளது.
செஸ் விளையாடுபவர்கள் அறிவுத் திறன் அதிகம் கொண்டவர்கள் என்பது கண்கூடு. ஆனால், அதையே தவறாகக் கற்பிக்கப்படும்போது மாணவர்கள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தமிழக அரசு இப் பிரச்னையைச் சரி செய்ய வேண்டுமென்றால் ஒவ்வொரு குறுமையப் போட்டிகளின்போதும் ஒவ்வொரு மாவட்டத்திலோ அல்லது தாலுகா அளவிலோ உள்ள சங்கங்களின் நிர்வாகிகளை மட்டுமே போட்டிக்கு நடுவர்களாக நியமிக்க வேண்டும். அப்போதுதான் தமிழக அரசு என்ன காரணத்துக்காக செஸ் போட்டியைக் கட்டாயமாக்கியதோ அது கண்டிப்பாக நிறைவேறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.