இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்தியா - இலங்கை இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. இதன் முதல் இன்னிங்ஸில் இந்தியா 393 ரன்களும், இலங்கை 306 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கை அணிக்கு 413 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 4-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 21 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது. கருணரத்னே 25 ரன்களுடனும், மேத்யூஸ் 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
5-வது நாளான இன்று, இந்திய அணி வீரர்கள் மிகுந்த துடிப்புடன் விளையாடினார்கள். முதல் பந்திலேயே மேத்யூஸின் விக்கெட்டைக் கைப்பற்றினார் உமேஷ் யாதவ். அதன்பிறகு இலங்கை அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.
ஒரு விக்கெட் எடுத்தால் அபார வெற்றி என்கிற நிலையில் மழை குறுக்கிட்டது. உணவு இடைவேளையின்போது, இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பிறகு மிஸ்ராவின் பந்துவீச்சில் கடைசி விக்கெட் வீழ்ந்தது. இலங்கை அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
இந்திய அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. கேப்டனாக விராட் கோலி தனது முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கே எல் ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டி, ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.