முகமது அலி கல்லுக்குள் ஈரம்
முகமது அலி ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரராக திகழ்ந்திருந்தாலும், அமைதியை அதிகம் விரும்பியவர். மற்றவர்களை மகிழ்விப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். அவர் குத்துச்சண்டை போட்டியில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
முகமது அலி ஆக்ரோஷமான குத்துச்சண்டை வீரராக திகழ்ந்திருந்தாலும், அமைதியை அதிகம் விரும்பியவர். மற்றவர்களை மகிழ்விப்பதில் அலாதி பிரியம் கொண்டவர். அவர் குத்துச்சண்டை போட்டியில் கொடி கட்டிப் பறந்த காலத்தில் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை உற்சாகப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அப்போது அவருடன் ஏராளமானோர் செல்வார்கள். ஒருமுறை அவர் நோயாளிகளை சந்திக்க மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த நிர்வாகி, ஒரு நோயாளியின் அறையை மட்டும் வேகமாக கடந்து போகுமாறு கூறினார். அதைக் கேட்ட முகமது அலி, "அந்த அறையில் இருப்பது யார்' என கேட்டார். அதற்கு அந்த நிர்வாகி, "அங்கு ஒரு முதியவர் இருக்கிறார். அவர் கடந்த சில ஆண்டுகளாகவே யாரிடமும் பேசுவதில்லை. அதனால் நான் அந்த அறைக்கு போவதில்லை' என பதிலளித்தார்.
உடனே நான் அங்கு போக வேண்டும் என்று கூறிய முகமது அலி, அந்த அறைக்குள் நுழைந்தார். அங்கு மிக வயதான ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஒருவர் இருந்தார். தோள் சுருங்கி, கூன் விழுந்த நிலையில் இருந்த அந்த முதியவரின் முன்னால் போய் நின்ற முகமது அலி, "பெரியவரே உங்களுக்கு நான் யார் என்று தெரிகிறதா' என கேட்டார். அதுவரை யாரிடமும் பேசாமல் இருந்த அந்த பெரியவர், "ஆம், நீங்கள் யார் என்று தெரிகிறது' என்றார். அவர் பேசியதால் உற்சாகமடைந்த முகமது அலி, "நல்லது. நான் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்' என்றார்.
உடனே அவர், "நீங்கள் ஜோ லூயிஸ் (லூயிஸும் அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர்)' என்றார். அவருடைய பதிலால் அலியுடன் வந்திருந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்ததோடு, இவர் லூயிஸ் இல்லை. முகமது அலி' என்று கூற முயன்றார்கள். அப்போது அவர்களைப் பார்த்து அமைதி காக்குமாறு சைகை காட்டிய முகமது அலி, அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.
அப்போது உடன் இருந்தவர்கள் அது குறித்து கேட்டபோது, "அந்த பெரியவர் ஜோ லூயிஸைசந்தித்ததாக நினைத்து மகிழ்வாரானால், அவரைப் பொறுத்தவரையில் நான் லூயிஸாகவே இருந்துவிட்டு போகிறேன்' என்றார்.
இந்த உலகில் சிறிய அளவில் புகழ் கிடைத்துவிட்டாலே அதை வைத்துக்கொண்டு ஆட்டம் போடும் மனிதர்கள் அதிகம். ஆனால் முகமது அலி புகழின் உச்சத்தில் இருந்தபோதுகூட அவரிடம் ஆணவம் தலைதூக்கியதில்லை. களத்தில் முகமது அலியின் பரம வைரியாக திகழ்ந்தவர் லூயிஸ். ஆனால் மருத்துவமனையில் இருந்த பெரியவர், நீங்கள் லூயிஸ என கேட்டபோதுகூட, அவரின் சந்தோஷத்துக்காக ஆமாம் லூயிஸ் என்று சொன்ன முகமது அலியின் பொறுமை எத்தனை பேருக்கு இருந்திருக்கும். நிச்சயம் அவர் இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும், அதை அவமானமாக நினைத்திருப்பார்கள். உலகப் புகழ் பெற்ற என்னை தெரியவில்லையா என கோபத்தில் கொந்தளித்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது.
களத்தில் எதிரிகளை ஆக்ரோஷமான குத்துகளால் சாய்க்கும் கொடூரமான வில்லனாக காட்சியளித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் பொறுமையும், எளிமையும் ஒருங்கே அமைந்த ஹீரோவாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார் முகமது அலி. அவர் மறைந்தாலும், அவரின் பெயரும், அவர் பெற்ற புகழும், அவர் படைத்த சாதனைகளும் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கல்லுக்குள் ஈரம் என்பதற்கு முகமது அலியே சரியான உதாரணம்.