முகப்பு
விளையாட்டு

இந்த வருட ஐபிஎல்-லில் சொதப்பும் ஸ்ரேயாஸ் ஐயர்!

இதுவரை ஆடிய 5 போட்டிகளில் அவருடைய ஸ்கோர்: 0, 3, 0, 19, 0.

Updated On : 3 மே, 2016 at 12:14 PM
பகிர்:

ஸ்ரேயாஸ் ஐயர், 2014-15 ரஞ்சி போட்டியில் மும்பை அணி சார்பாக தேர்வானார். அந்த வருடம் மும்பை அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற பெருமையைப் பெற்றார்.

ஸ்ரேயாஸின் திறமையைச் சரியாக கணித்த டெல்லி ஐபிஎல் அணி, கடந்த வருட ஏலத்தில் 2.6 கோடி ரூபாய்க்குத் தேர்ந்தெடுத்தது. ஆரம்ப விலையான 10 லட்சத்தில் ஏலம் ஆரம்பித்து 2.6 கோடி வரை சென்றபோது அவர் தனிக்கவனம் பெற்றார். டெல்லி அணியின் பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவுக்கு ஸ்ரேயாஸை 13 வயதிலிருந்து தெரியும். அவருடைய பலமான சிபாரிசில் டெல்லி அணி ஸ்ரேயாஸ் மீது நம்பிக்கை வைத்தது வீண்போகவில்லை.

தன் திறமையை ஐபிஎல்-லிலும் நிரூபித்தார் ஸ்ரேயாஸ். சிக்ஸர்கள் அடிப்பதிலும் பொறுப்புடன் ஆடுவதிலும் பெயர் வாங்கினார்.

Advertisement

அந்த ஐபிஎல்-லில் 14 போட்டிகள் ஆடியவர், 439 ரன்களைக் குவித்தார். 4 அரை சதங்கள். 21 சிக்ஸர்கள். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அவர் 8-ம் இடம் பிடித்தார். சிறந்த இளம் ஐபிஎல் வீரர் என்கிற பட்டத்தையும் பெற்றார். பிறகு கடந்த வருட ரஞ்சிப் போட்டியில் 1321 ரன்கள் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். புதிய நட்சத்திரம் என்று பலரும் அவரைப் பெருமையாகப் பேசினார்கள்.

இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், இந்த வருட ஐபிஎல்-லில் மிகவும் ஏமாற்றிவிட்டார்.

இதுவரை ஆடிய 5 போட்டிகளில் அவருடைய ஸ்கோர்: 0, 3, 0, 19, 0. அதாவது 5 போட்டிகளில் இருபத்து இரண்டே ரன்கள்! அதிலும்  மூன்று பூஜ்ஜியங்களை எடுப்பார் என்று யாருமே கனவிலும் நினைத்திருக்கமுடியாது. இதனால் ஸ்ரேயாஸ், இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு தள்ளிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில், புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத்தை எதிர்கொள்கிறது டெல்லி. புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணிக்கு இன்றைய போட்டி முக்கியமானதாகும். இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. அப்படியே கிடைத்தாலும் வாய்ப்பை இந்தமுறையாவது சரியாகப் பயன்படுத்திக்கொள்வாரா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.