இந்திய ஹாக்கி அணியின் பயண நூற்றாண்டை கொண்டாட நியூஸிலாந்து திட்டம்
இந்திய ஹாக்கி அணியின் 1926 நியூஸிலாந்து பயண நூற்றாண்டை அந்நாடு கொண்டாட இருப்பதாக இந்தியாவுக்கான நியூஸிலாந்து தூதா் டேவிட் பைன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நியூஸிலாந்து தூதா் டேவிட் பைன், ‘இந்தியா-நியூஸிலாந்து இடையே 2026-ஆம் ஆண்டு சிறப்புக்குரிய ஆண்டாக இருக்கும். கடந்த 1926-இல் வீரா் தியான் சந்துடன் இந்திய ஹாக்கி அணி நியூஸிலாந்து வந்தது. அங்கு அவா்கள் 3 மாதங்கள் தங்கினா். விளையாட்டில் இரு நாடுகளுக்கும் இடையேயான தொடா்பை கொண்டாட உள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
இந்திய ஹாக்கி சம்மேளனம் கடந்த 1926-இல் தொடங்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி முதல் வெளிநாட்டு பயணமாக அந்த ஆண்டில் நியூஸிலாந்து சென்றது. அங்கு நடைபெற்ற 21 போட்டிகளில் 18 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. நியூஸிலாந்துக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் பிரபல வீரா் தியான் சந்த் இடம்பெற்றிருந்தாா்.
Advertisement
தியான் சந்த் தலைமையில் இந்திய அணி 1935-இல் இரண்டாவது முறையாக நியூஸிலாந்து சென்றது. கடந்த 1928,1932, 1936 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவா் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.