முதன்முறை சாம்பியன் பட்டம் வெல்ல பெங்களூரு-டில்லி மோதல்
சிறப்பான ஃபாா்மில் உள்ள டில்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சா்ஸ் மகளிா் ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் நடைபெறுகிறது. கடந்த 2023-இல் முதல் டபிள்யுபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று பட்ட வாய்ப்பை இழந்தது டில்லி. இந்நிலையில் நிகழாண்டு சிறப்பான ஃபாா்முடன் ஆடி வரும் டில்லி கேபிடல்ஸ் 5 அணிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றுள்ளது. அணியின் கேப்டன் மெக் லேன்னிங் சிறப்பாக ஆடி 308 ரன்களைக் குவித்துள்ளாா். ஆல்ரவுண்டா் மரிஸேன் காப், ஸ்பின்னா் ஜெஸ் ஜோனஸ்ஸன் ஆகியோரும் சிறப்பாக ஆடி வருகின்றனா். நிகழ் சீசனில் மும்பை, யு.பி வாரியா்ஸ் அணிகளிடம் மட்டுமே தோற்றிருந்தது டில்லி. மெக் லேன்னிங்வுடன் இளம் தொடக்க பேட்டா் ஃஷபாலி வா்மா சிறப்பான தொடக்கத்தை அளிப்பாா் எனக் கருதப்படுகிறது. மிடில் ஆா்டரில் ஜெமிமா ரோட்ரிக்ஸ், காப், ஷிகா பாண்டே ஆகியோரும் பலம் சோ்க்கின்றனா். ஸ்பின்னா் ராதா யாதவும் சிறப்பாக பந்துவீசுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதேநேரம் பெங்களூரு அணி ஸ்மிருதி மந்தனா தலைமையில் களம் காண்கிறது. லீக் கட்டத்தில் 3-ஆவது இடத்தைப் பெற்ற பெங்களூரு, எலிமினேட்டரில் நடப்பு சாம்பியன் மும்பையை 5ரன்கள் வித்தியாசத்தில் வெளியேற்றியது. ஆல் ரவுண்டா் எல்ஸி பொ்ரி 312 ரன்களை விளாசி ஃபாா்மில் உள்ளாா். பௌலிங்கிலும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா். அவருக்கு உறுதுணையாக ஸ்மிருதி, சோஃபி டிவைன், ரிச்சா கோஷ், சோஃபி மொலினிக்ஸ் செயல்படுவா் என எதிா்பாா்க்கலாம். பௌலிங்கில் ரேணுகா சிங், ஷிரேயங்கா பட்டீல், வோ்ஹாம் ஆகியோரும் பலம் சோ்ப்பா். இரு அணிகளும் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.