விராட் கோலி உயிருக்கு ஆபத்து?
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் அண்மையில் முடிவடைந்த நிலையில், நேற்று (மே.21) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் வெளியேற்ற போட்டியில் (எலிமினேட்டர்) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலசஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இறுதியாக 6 போட்டிகளில் தொடர் வெற்றியைப் பெற்ற பெங்களூரு அணியும் பலம் வாய்ந்த ராஜஸ்தான் அணியும் மோதுவதால் இப்போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், போட்டிக்கு முன் நிகழும் பயிற்சியில் பெங்களூரு அணி கலந்துகொள்ளவில்லை. அதற்கான, காரணம் குறித்து வெளியாகாமல் இருந்தது.
தற்போது, பெங்களூரு அணியைச் சேர்ந்த விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக குஜராத் காவல்துறை தெரிவித்ததால்தான் பெங்களூரு அணி பயிற்சியை தவிர்த்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு நாள்களுக்கு முன், அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் ஐஎஸ்ஐஸ் அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபின்பே காவல்துறை இந்த எச்சரிக்கையை பெங்களூரு அணி நிர்வாகத்திடம் கூறியதாகத் தகவல்!