சிறுவர்கள் போல விளையாடிய இலங்கை பேட்ஸ்மேன்கள்: தில்ஷன் விமரிசனம்!
சில சமயங்களில், சிறுவர்கள் போல நடுவரிசை வீரர்கள் நடந்துகொள்கிறார்கள்..
நுவண் பிரதீப் மற்றும் மலிங்காவின் அபார பந்துவீச்சால் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கார்டிஃப் சோபியா கார்டனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணியினரின் பேட்டிங்கை முன்னாள் வீரர் தில்ஷன் விமரிசனம் செய்துள்ளார். க்ரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
நடுவரிசை வீரர்கள் இந்தமுறையும் பொறுப்புடன் விளையாடவில்லை. பந்து பெரிதாக எதுவும் செய்யவில்லை. சில சமயங்களில், சிறுவர்கள் போல நடுவரிசை வீரர்கள் நடந்துகொள்கிறார்கள். பேட்டிங் செய்கிறபோது அப்படித்தான் நடந்துகொள்கிறார்கள். பேட்டிங் பங்களிப்பு குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். குஷால் பெரேரா எப்படி எளிதாக ஆடினார் என்பதை எல்லோரும் பார்த்தோம். இயல்பாக விளையாடி, பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் அளித்தார். உதானா மோசமான ஷாட்டால் ஆட்டமிழந்தார். அவர் குஷாலுக்கு ஆதரவு அளித்திருக்கவேண்டும். 140/1 என இருந்து அப்படியொரு சரிவைச் சந்தித்ததற்கு நான் நடுவரிசை வீரர்களைத்தான் குறை கூறுவேன். 180/8 என மாறியதை என்னால் நம்பவே முடியவில்லை என்று கூறியுள்ளார்.