அரையிறுதிக் கனவை விட்டு விடவில்லை: வங்கதேச முன்னணி வீரர் நம்பிக்கை
5-வது இடத்தைப் பிடிக்க நன்கு ஆடவேண்டும் என்று எங்கள் அணி வீரர்கள் யாரும் எண்ணவில்லை...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய வங்கதேசம், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. முஷ்ஃபிகர் ரஹிம் 9 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 102 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வார்னர் ஆட்டநாயகன் ஆனார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. வங்கதேச அணி, 5 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்துக்கு வங்கதேச அணியின் முன்னணி வீரர் தமிம் இக்பால் கூறியதாவது:
எங்களுக்கு இன்னமும் அரையிறுதி வாய்ப்பு இருப்பதாக எண்ணுகிறோம். 5-வது இடத்தைப் பிடிக்க நன்கு ஆடவேண்டும் என்று எங்கள் அணி வீரர்கள் யாரும் எண்ணவில்லை. அடுத்த மூன்று ஆட்டங்களையும் நாங்கள் வென்றுவிட்டால் அரையிறுதி வாய்ப்பு கிடைக்கக்கூடும். அதற்கு வழியில்லை என்றால் மட்டுமே 5-வது இடத்துக்குப் போட்டியிடுவோம். இந்தத் தோல்வியிலும் நல்ல விஷயம் என்னவென்றால், சேஸிங்கில் கடந்த இரு ஆட்டங்களிலும் நாங்கள் 320 ரன்களுக்கும் அதிகமாக எடுத்துள்ளோம். 320-330 இலக்கை எதிர்கொள்ள எங்கள் பேட்ஸ்மேன்கள் தயாராக உள்ளார்கள். மூன்று நான்கு ஓவர்கள் பந்துவீச்சில் நாங்கள் வெற்றியை இழந்துவிட்டோம். கடைசி 3 ஓவர்களை நன்கு வீசினோம். எங்கள் குறைகளை நாங்கள் குறைத்துக்கொள்ளவேண்டும். பெரிய இலக்குகளை விரட்டுவதில் எனக்கு அனுபவம் கிடையாது. எனவே நான் ஸ்கோர் போர்டைப் பார்க்காமல் ஆடினேன். 30 ஓவரின்போது 180-200 எடுக்க எண்ணினேன். இதன்மூலம் கடைசி 20 ஓவர்களில் எங்களுக்கு வாய்ப்பு இருக்கும் என நம்பினோம். ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆட ஆரம்பித்திருந்தால் நாங்கள் 330 ரன்களை எடுத்திருக்க மாட்டோம். நானும் ஷகிப்பும் தவறான தருணத்தில் ஆட்டமிழந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.