கேப்டன் பொறுப்புக்கு பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பான தெரிவாக இருப்பார்கள் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பேட்டுக்கு பின்னால் மறைந்துகொள்வதில்லை எனவும், கேப்டன் பொறுப்புக்கு அவர்கள் மிகவும் சரியான தெரிவாக இருப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சாளர்கள் மிகவும் புத்திசாலித்தனம் நிறைந்தவர்கள் என நினைக்கிறேன். ஏனென்றால், அவர்கள் பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும். பந்துவீச்சாளர்கள் பேட்டுக்கு பின்னால் மறைந்து கொள்வதில்லை. பந்துவீச்சாளர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. போட்டியில் தோல்வியடைந்தால் பந்துவீச்சாளர்களையே விமர்சிப்பார்கள். பந்துவீச்சாளர் பொறுப்பு மிகவும் கடினமானது.
ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் கேப்டனாக சிறப்பான செயல்படுகிறார். நான் குழந்தையாக இருந்தபோது, வாசிம் அக்ரம் மற்றும் வாகர் யூனிஸ் ஆகியோரை கேப்டன்களாக பார்த்திருக்கிறேன். கபில் தேவ் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். இம்ரான் கான் பாகிஸ்தான் அணிக்காக உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். அதனால், பந்துவீச்சாளர்கள் கேப்டன் பொறுப்புக்கு மிகவும் சிறப்பானவர்கள். நமது நாடு மிகப் பெரிய பேட்ஸ்மேன்களையே விரும்புகிறது என்பது எனக்குப் புரிகிறது. ஆனால், என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்களே ஆட்டத்தை நகர்த்திச் செல்கிறார்கள்.
தொலைக்காட்சியில் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்த்து வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவன் நான். டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் சிறந்தது. டெஸ்ட் போட்டிகளில் நான் சிறப்பாக செயல்பட்டால், மற்ற வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில்) தானாக சிறப்பாக செயல்படுவேன் என்றார்.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.