படம் | AP
கிரிக்கெட்

டிராவிஸ் ஹெட்டிடம் முகமது சிராஜ் நடந்துகொண்ட விதம் சரியா? அனல் பறக்கும் அடிலெய்டு டெஸ்ட்!

அடிலெய்டு டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்த பிறகு முகமது சிராஜ் அதனை கொண்டாடிய விதம் குறித்து...

DIN

அடிலெய்டு டெஸ்ட்டில் டிராவிஸ் ஹெட்டை ஆட்டமிழக்கச் செய்த பிறகு முகமது சிராஜ் அதனை கொண்டாடிய விதம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடியது. டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் முன்னிலை பெற்றது.

அனல் பறக்கும் அடிலெய்டு டெஸ்ட்

முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முகமது சிராஜ் வீசிய ஃபுல் டாஸ் பந்தில் டிராவிஸ் ஹெட் போல்டானார். அதனை முகமது சிராஜ் மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடினார். டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டினை அவர் கொண்டாடிய விதம் பேசுபொருளாகியுள்ளது.

டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டினை வீழ்த்திய முகமது சிராஜ், அவரை பெவிலியன் செல்லுமாறு ஆக்ரோஷமாக கையால் சைகை செய்தார். இதனையடுத்து, டிராவிஸ் ஹெட்டும் பதிலுக்கு ஏதோ கூறிவிட்டு பெவிலியன் திரும்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக டிராவிஸ் ஹெட் கூறியதாவது: எனது விக்கெட்டினை வீழ்த்தியதும் நான், அவர் நன்றாக பந்துவீசியதாக கூறினேன். ஆனால், அவர் அதனை வேறு விதமாக எடுத்துக்கொண்டு என்னை பெவிலியனுக்கு செல்லுமாறு ஆக்ரோஷமாக சைகை செய்தார். உண்மையில், அவரது செயல் எனக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால், அவர் அப்படி கொண்டாட விரும்பினால் அப்படியே கொண்டாடிவிட்டு போகட்டும் என்றார்.

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

டிராவிஸ் ஹெட்டினை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, முகமது சிராஜ் கொண்டாடிய விதம் தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: முகமது சிராஜின் அந்த கொண்டாட்டம் தேவையற்றது. டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் அடித்துள்ளார். அவர் 4 ரன்களிலோ அல்லது 5 ரன்களிலோ ஆட்டமிழக்கவில்லை. 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்த வீரர் ஒருவரின் விக்கெட்டை வீழ்த்தி, இப்படி கொண்டாடுவது தேவையற்றது. முகமது சிராஜின் இந்த செயலுக்காக மைதானத்தில் போட்டியைக் காண வந்துள்ள ரசிகர்கள் அவரை கிண்டல் செய்வதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

டிராவிஸ் ஹெட் உள்ளூர் நாயகன். 100 ரன்களைக் கடந்து விளையாடிய டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு, அவரது திறமையான ஆட்டத்தை சிராஜ் பாராட்டியிருந்தால், அங்குள்ள அனைத்து ரசிகர்களின் ஹீரோவாக அவர் மாறியிருப்பார். ஆனால், டிராவிஸ் ஹெட்டுக்கு தேவையற்ற பிரியாவிடை அளித்ததன் மூலம், முகமது சிராஜ் ரசிகர்கள் அனைவரின் வில்லனாக மாறிவிட்டார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னாலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு!

வீட்டில் பதுங்கிய 2 மரநாய்கள் மீட்பு

சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு

சின்னா் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிா்ச்சித் தோல்வி!

SCROLL FOR NEXT