நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
வெலிங்டனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 323 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 583 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் டாம் பிளண்டல் சதம் விளாசி அசத்தினார். அவர் 102 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கிறிஸ் வோக்ஸ், பிரைடான் கார்ஸ் மற்றும் சோயப் பஷீர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்குக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 14 ஆம் தேதி ஹாமில்டனில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.