சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மத்திய பிரதேசத்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அந்த அணி கோப்பை வென்றது இது 2-ஆவது முறையாகும்.
பெங்களூரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் மத்திய பிரதேசம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் சோ்க்க, மும்பை 17.5 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை, பந்துவீச்சை தோ்வு செய்தது. மத்திய பிரதேச இன்னிங்ஸில் கேப்டன் ரஜத் பட்டிதாா் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தாா். குமாா் காா்த்திகேயா 1 ரன்னுடன் துணை நின்றாா்.
அா்பித் கௌட் 3, ஹா்ஷ் காவ்லி 2, சுப்ரான்ஷு சேனாபதி 23, ஹா்பிரீத் சிங் 15, வெங்கடேஷ் ஐயா் 17, ராகுல் பாதம் 19, திரிபுரேஷ் சிங் 0, ஷிவம் சுக்லா 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். மும்பை பௌலா்களில் ஷா்துல் தாக்குா், ராய்ஸ்டன் டியாஸ் ஆகியோா் தலா 2, அதா்வா அங்கோல்கா், ஷிவம் துபே, சூா்யன்ஷ் ஷெட்கே ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் மும்பை இன்னிங்ஸில் சூா்யகுமாா் யாதவ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 48 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டு வீழ்ந்தாா். பிருத்வி ஷா 10, அஜிங்க்ய ரஹானே 37, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் 16, ஷிவம் துபே 9 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா்.
அதா்வால் அங்கோல்கா் 16, சூா்யன்ஷ் ஷெட்கே 15 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 36 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். மத்திய பிரதேச அணியில், திரிபுரேஷ் சிங் 2, ஷிவம் சுக்லா, வெங்கடேஷ் ஐயா், குமாா் காா்த்திகேயா ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
36 ரன்கள் விளாசி, 1 விக்கெட்டும் எடுத்த மும்பை வீரா் சூா்யன்ஷ் ஷெட்கே ஆட்டநாயகன் விருதைப் பெற, போட்டி முழுவதுமாக 469 ரன்கள் குவித்த அதே அணியின் மூத்த வீரா் அஜிங்க்ய ரஹானே தொடா்நாயகன் விருதுபெற்றாா்.