பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சு சவாலுக்கு தயாராவதாக ஆஸ்திரேலிய அணியின் புதிய தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு மிக முக்கியமான தொடர் என்பதால் இரு அணிகளும் தங்களை தீவிரமாக தயார் செய்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரருக்கான தேடலும் முடிவுக்கு வந்துவிட்டது. பார்டர் - கவாஸ்கர் தொடரில் நாதன் மெக்ஸ்வீனி (அறிமுக வீரர்) ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ளதை ஆஸ்திரேலிய அணி அண்மையில் உறுதிப்படுத்தியது.
தனித்துவமான சவால்
பார்டர் - கவாஸ்கர் தொடரில் உஸ்மான் கவாஜாவுடன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜஸ்பிரித் பும்ராவின் தனித்துவமான பந்துவீச்சு சவாலுக்கு தயாராவதாக மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ராவும் ஒருவர். அவரது பந்துவீச்சு ஸ்டைல் மிகவும் தனித்துவமானது. அதனால், அவரது பந்துவீச்சுக்கு ஏற்றவாறு பேட் செய்வது கடினமாக இருக்கப் போகிறது. புதிய பந்துவீச்சாளருக்கு எதிராக முதன் முதலில் பேட் செய்வது சற்று கடினமாக இருக்கும் இருப்பினும், பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவரது பந்துவீச்சு சவாலை சந்திக்கவுள்ளதை எதிர்நோக்கி ஆவலாக காத்திருக்கிறேன் என்றார்.
மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பான்கிராஃப்ட் மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் போன்ற தொடக்க ஆட்டக்காரர்கள் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவதற்கான போட்டியில் இருந்த நிலையில், அன்கேப்டு வீரரான நாதன் மெக்ஸ்வீனி அந்த இடத்துக்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.