இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள பெர்த் ஆடுகளம் குறித்து அந்த ஆடுகள சீரமைப்பாளர் பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
வேகம், பௌன்சர் இருக்கும்
பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி நடைபெறும் பெர்த்தின் ஆடுகளம் வேகப் பந்துவீச்சு மற்றும் பௌன்சர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என அந்த ஆடுகள சீரமைப்பாளர் ஐசக் மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இது ஆஸ்திரேலியா. அதிலும் குறிப்பாக, பெர்த். இந்த ஆடுகளம் வேகம் மற்றும் பௌன்சர்களுக்கு உதவுமாறு சீரமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 89 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது, ஆடுகளத்தில் சில வெடிப்புகளும் ஏற்பட ஆஸ்திரேலிய அணியின் மார்னஸ் லபுஷேன் அவரது கைகளில் அடிபட்டு தடுமாறினார். பாகிஸ்தான் அணியின் 20 விக்கெட்டுகளில் 12 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றினர்.
இந்த மைதானத்தில் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை 140 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது. பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்களான ஷாகின் ஷா அஃப்ரிடி, நஷீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரௌஃப் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: ஆஸி.க்கு எதிரான டி20 தொடரை குறிவைக்கும் முகமது ரிஸ்வான்!
முதல் போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக் கூறப்படுவதால், இந்திய அணி அதற்கேற்றவாறு பிளேயிங் லெவனை தேர்வு செய்து களமிறக்க வேண்டியது அவசியம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.