முகப்பு
கிரிக்கெட்

நடத்தை விதிகளை மீறிய தெ.ஆ. பந்துவீச்சாளருக்கு அபராதம்!

நடத்தை விதிகளை மீறிய தெ.ஆ. பந்துவீச்சாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 நவம்பர், 2024 at 2:16 PM
பகிர்:

ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின் போது நடுவரின் முடிவில் கருத்து வேறுபாடு தெரிவித்ததற்காக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜிக்கு ஐசிசி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரின் சதத்தால் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 3-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.

இந்தப் போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசிய தென்னாப்பிரிக்க பவுலர் ஜெரால்ட் கோட்ஜி 3 ஓவர்கள் பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

15 ஓவரில் பவுலர் ஜெரால்ட் கோட்ஜி வீசிய பந்துக்கு நடுவர் 'வைட்' என்று கூறியுள்ளார். இதற்கு நடுவரிடம் எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டதாக கூறப்படுகிறது.

சர்வதேச போட்டியின் போது நடுவர்களின் முடிவில் கருத்து வேறுபாடு கூறுவது தொடர்பான ஐசிசி நடத்தை விதி 2.8 ஐ மீறியது கண்டறியப்பட்டு அவருக்கு இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.

24 வயதான ஜெரால்ட் கோட்ஜி, அவர் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதால் போட்டிக் கட்டணத்தில் இருந்து அவருக்கு 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கள நடுவர்கள் அல்லாஹுதின் பலேக்கர், ஸ்டீபன் ஹாரிஸ், மூன்றாவது நடுவர் லுபாபலோ குகுமா, நான்காவது நடுவர் அர்னோ ஜேக்கப்ஸ் ஆகியோர் பந்து வீச்சாளர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த விதியின்படி ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50 சதவீதம் அபராதம் மற்றும் இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்படும்.

24 மாதத்துக்குள் ஒரு வீரர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியிழப்பு புள்ளிகளை பெற்றால், அவர் விளையாட தடை செய்யப்படுவார். இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் என்பது ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகள் அல்லது இரண்டு டி20 போட்டிகளில் இருந்து தடை செய்யப்படுவதற்கு சமமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.