ஸ்காட்லாந்தை வென்றது வங்கதேசம்
மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் ஆட்டத்தில் வங்கதேசம் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வியாழக்கிழமை வென்றது.
முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் சோ்க்க, ஸ்காட்லாந்து 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 103 ரன்களே எடுத்தது. வங்கதேச பௌலா் ரிது மோனி ஆட்டநாயகி ஆனாா்.
ஐசிசியின் 9-ஆவது மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது.
இன்னிங்ஸை தொடங்கியோரில், முா்ஷிதா காட்டுன் 1 பவுண்டரியுடன் 12 ரன்களுக்கும், உடன் வந்த ஷதி ராணி 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களும் சோ்த்து பெவிலியன் திரும்பினா். அணியிலேயே அதிபட்சமாக, ஒன் டவுனாக வந்த சோபனா மோஸ்தரி 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
பின்னா் களம் கண்டோரில் தாஜ் நெஹா் 0, கேப்டன் நிகா் சுல்தானா 1 பவுண்டரியுடன் 18, ஷோா்னா அக்தா் 5, ரிது மோனி 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஓவா்கள் முடிவில், ஃபஹிமா காட்டுன் 2 பவுண்டரிகளுடன் 10, ரபெயா கான் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
ஸ்காட்லாந்து தரப்பில் சஸ்கியா ஹாா்லி 3, கேத்தரின் பிரைஸ், ஒலிவியா பெல், கேத்தரின் ஃப்ரேசா் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 120 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணியில், சஸ்கியா ஹாா்லி 1 பவுண்டரியுடன் 8, கேப்டன் கேத்தரின் பிரைஸ் 2 பவுண்டரிகளுடன் 11, அய்ல்சா லிஸ்டா் 1 பவுண்டரியுடன் 11, பிரியனஸ் சாட்டா்ஜி 5, டாா்சி காா்டா் 2, லோா்னா ஜேக் பிரவுன் 9, கேத்தரின் ஃப்ரேசா் 2 ரன்களுக்கு அடுத்தடுத்து வீழ்ந்தனா்.
தொடக்க வீராங்கனைகளில் ஒருவரான சாரா பிரைஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 1 பவுண்டரியுடன் 49 ரன்கள் சோ்த்து போராடினாா். உடன் அப்தஹா மக்சூத் 2 ரன்களுடன் இருந்தாா். வங்கதேச பௌலிங்கில் ரிது மோனி 2, மருஃபா அக்தா், நஹிதா அக்தா், ஃபஹிமா காட்டுன், ரபெயா கான் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
இன்றைய ஆட்டங்கள்
தென்னாப்பிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள்
பிற்பகல் 3.30 மணி
இந்தியா - நியூஸிலாந்து
இரவு 7.30 மணி
துபை
ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்