இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு இன்னும் 68 ரன்கள் தேவைப்படுகின்றன.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 305 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 309 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. அந்த அணியில் முதல் இன்னிங்ஸில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 114 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் திமுத் கருணாரத்னே அதிகபட்சமாக 83 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் முதல் இன்னிங்ஸில் வில்லியம் ஓ’ரூர்கி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
68 ரன்கள் தேவை, 2 விக்கெட்டுகள் தேவை
நியூசிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 340 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாம் லாதம் 70 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை 309 ரன்கள் குவிக்க, நியூசிலாந்துக்கு 275 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் டாம் லாதம் 28 ரன்களும், கேன் வில்லியம்சன் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திரா தனி ஒருவனாக வெற்றிக்காக போராடி வருகிறார்.
முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற நியூசிலாந்து அணிக்கு கடைசி நாளில் 68 ரன்கள் தேவைப்படுகின்றன. இலங்கையின் வெற்றிக்கு இன்னும் இரண்டு விக்கெட்டுகள் தேவைப்படுகின்றன.
ரச்சின் ரவீந்திரா 91 ரன்களுடனும், அஜாஸ் படேல் 0 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.