இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி இந்தியாவைக் காட்டிலும் 23 ரன்கள் முன்னிலை பெற்றது.
6-வது சதம் விளாசிய ஜெய்ஸ்வால்
23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 51 ரன்களுடனும், ஆகாஷ் தீப் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 2) மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஆகாஷ் தீப் 73 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 94 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
அதன் பின், ஜெய்ஸ்வாலுடன் கேப்டன் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தார். உணவு இடைவேளையின்போது, இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 85 ரன்களுடனும், ஷுப்மன் கில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கேப்டன் ஷுப்மன் கில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஜெய்ஸ்வால் மற்றும் கருண் நாயர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக விளையாடிய கருண் நாயர் 32 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.
களமிறங்கியது முதலே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 127 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவருடைய 6-வது சதமாகும். ஜெய்ஸ்வால் 110 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறார். மறுமுனையில் ஜடேஜாவும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 240 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.