கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பெற்றது குறித்து புஜாரா நீண்ட பதிவினை பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவில் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
வார்த்தைகளில் விவரிக்க முடியாது...
ராஜ்கோட்டின் சிறிய கிராமத்திலிருந்த சிறுவனாக இருந்து, எனது பெற்றோர்களுடன் நட்சத்திரத்தை அடைய முயற்சித்தேன்; இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற கனவு கண்டேன்.
கிரிக்கெட்டில் சிறியதாகவே பங்காற்றிய எனக்கு அது - மதிப்பற்ற வாய்ப்புகள், அனுபவங்கள், நோக்கம், காதல் எனவும் இதற்கெல்லாம் மேலாக எனது மாநிலம், நாட்டினை பிரதிநிதிப்படுத்தி விளையாடும் வாய்ப்பு என அதிகமாகவே திருப்பி அளித்துள்ளது.
இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்து, தேசிய கீதம் பாடி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எனது சிறந்த செயல்பாடுகளை அளித்துள்ளேன். இதையெல்லாம் வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
எல்லாமே ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும்...
எல்லா நல்லவைகளும் ஒருநாள் முடிவுக்கு வரவேண்டும். மிகுந்த நன்றியுடன் அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுகிறேன்.
எனக்கு வாய்ப்பளித்த பிசிசிஐ, சௌராஷ்டிரா அசோசியேஷனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நான் விளையாடிய கிளப், உள்ளூர் அணிகள், சில நாடுகளின் அணிகள் என அனைத்துக்கு சமமான நன்றியைத் தெரிவிக்கிறேன்.
விலைமதிப்பற்ற வழிகாட்டுதல்களை அளித்த ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள், ஆன்மிக குரு என இவர்கள் இல்லாமல் நான் இல்லை. இவர்களுக்கு எப்போதும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
அனைவருக்குமே நன்றி...
சக வீரர்கள், வலைப் பயிற்சி பந்துவீச்சாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நடுவர்கள், ஆடுகள பராமரிப்பாளர்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. இதுவரை என் மீதான நம்பிக்கைக்கு எனது ஒப்பந்ததாரர்களும் மிக்க நன்றி.
இந்த விளையாட்டுதான் (கிரிக்கெட்) என்னை உலகம் முழுவதும் கொண்டுச் சென்றது. இதற்கெல்லாம் ஆர்வமாக ஆதரவளித்த ரசிகர்கள்தான் எப்போதும் மாறாதவர்களாக இருந்தார்கள்.
நான் எங்கெல்லாம் விளையாடினோனோ அங்கெல்லாம் எனக்கு வாழ்த்தையும் உற்சாகத்தையும் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
இதையெல்லாம்விட எனக்காக தியாகம்செய்த எனது குடும்பம் - எனது பெற்றோர்கள், எனது மனைவி பூஜா, எனது மகள் அதிதி, மற்ற குடும்பத்தினர்கள் இல்லாவிட்டால் நான் இல்லை. இவர்கள்தான் எனது பயணத்தை மதிப்புமிக்கதாகவே மாற்றினார்கள்.
எனக்கு கிடைத்த ஆதரவிற்கும் நேசத்திற்கும் மிக்க நன்றி! எனக் கூறியுள்ளார்.
புஜாரா என்ன செய்தார்?
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2010-இல் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான புஜாரா 103 டெஸ்ட்டில் 7,195 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட்டில் 19 சதங்கள் 35 அரைசதங்கள் அடித்துள்ளார். டிராவிட்டுக்கு அடுத்து ’இந்தியாவின் சுவர்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புஜாரா. விக்கெட்டினை விடாமல் எதிரணியினரை திணறடிப்பதில் வல்லவர்.
சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த புஜாரா தற்போது ஓய்வினை அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.