ஐபிஎல் மினி ஏலத்துக்கான இறுதிப்பட்டியல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிச.16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக, அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்துக் கொண்டு மற்ற வீரர்களை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி விடுவித்தது.
அதன்படி, சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட 10 அணிகளும் தங்களிடம் இருக்கும் தொகைக்கு ஏற்ப மினி ஏலத்தில் பங்கேற்று வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.
அந்த வகையில் மினி ஏலத்தில் பங்கேற்கும் கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், குறைந்தபட்சமாக மும்பை அணியிடம் ரூ.2.75 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளது.
அதேவேளையில், சென்னை (ரூ.43.40 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ.16.40 கோடி), ஹைதராபாத் (ரூ.25.50 கோடி), குஜராத் (ரூ.12.90 கோடி), ராஜஸ்தான் (ரூ. 16.05 கோடி), தில்லி (ரூ. 21.80 கோடி), லக்னௌ (ரூ. 22.95 கோடி), பஞ்சாப் (ரூ. 11.50 கோடி) தொகையை வைத்துள்ளன.
டிச.16 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறும் மினி ஏலத்தில் பங்கேற்க 14 நாடுகளைச் சேர்ந்த 1,355 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இந்த ஏலத்தில் அனைத்து அணிகளிலும் மொத்தம் 77 அணி இடங்களுக்காக வீரர்களில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், மினி ஏலத்துக்கு இறுதிப்பட்டியலை பிசிசிஐ செயலர் தேவ்ஜித் சாய்க்கியா இன்று வெளியிட்டார். இதில், 240 இந்திய வீரர்கள் மற்றும் 110 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 350 பேர் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் டிச. 16 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது.
மொத்தமாக, சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய, விளையாடும் இந்திய வீரர்கள் 16 பேர், வெளிநாட்டு வீரர்கள் 96 பேர், சர்வதேச போட்டிகளில் விளையாடாத இந்திய வீரர்கள் 224 பேர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.
டெவான் கான்வே, கேமரூன் க்ரீன், ஜேக் ஃபிரேசர், சர்பராஸ் கான், டேவிட் மில்லர், பிரித்வி ஷா உள்ளிட்டோரின் பெயர்கள் முதல் செட்டில் இடம்பெற்றுள்ளன. இதில், ரூ. 2 கோடி அடிப்படை விலையில் 40 வீரர்களும், ரூ. 1.50 கோடியில் 9 வீரர்களும், ரூ. 1.25 கோடியில் 4 வீரர்களும், ரூ. 1 கோடியில் 17 வீரர்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.