உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 6-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அபார வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 5-வது இடத்துக்கு சறுக்கியது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி தற்போது தரவரிசையில் 6-வது இடத்துக்கு சறுக்கியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா 100 சதவிகித வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 75 சதவிகித வெற்றிகளுடன் தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே உள்ளன.
ஆஷஸ் தொடரில் நடைபெறும் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 7-வது இடத்துக்கு சறுக்கக் கூடும். இந்திய அணிக்கு தற்போது எந்தவொரு டெஸ்ட் தொடரும் இல்லை. அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் கிடைத்த வெற்றி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான போட்டியாளராக நியூசிலாந்து அணியை மாற்றியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கான நியூசிலாந்து அணியின் வாய்ப்பு அதிகரிக்கும்.
நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பே ஓவலில் வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.