அடுத்த ஐபிஎல் சீசனின் அனைத்துப் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் இங்லிஷை விளையாடவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் அபுதாபியில் அண்மையில் நிறைவடைந்தது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய பேட்டர் ஜோஷ் இங்லிஷை ஏலத்தில் எடுக்க லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ. 8.6 கோடிக்கு அவரை லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஏலத்தில் எடுத்தது.
கடந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஷ் இங்லிஷ், அடுத்த ஐபிஎல் சீசனில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாவார் என பிசிசிஐ தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி ஜோஷ் இங்லிஷுக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் அவர் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனக் கூறப்பட்டது. இதன் காரணமாக மினி ஏலத்துக்கு முன்பாக ஜோஷ் இங்லிஷை பஞ்சாப் கிங்ஸ் அணி விடுவித்தது.
இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் சீசன் முழுவதுமாக ஜோஷ் இங்லிஷ் விளையாடவுள்ளதாகக் கூறப்படுவது பிசிசிஐ மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் ஜோஷ் இங்லிஷ் விளையாடமாட்டார் எனவும், வெறும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனவும் அனைத்து அணிகளுக்கும் மினி ஏலத்துக்கு முன்பாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஜோஷ் இங்லிஷின் தனிப்பட்ட திட்டங்களில் ஏதேனும் மாற்றம் மேற்கொண்டுள்ளாரா? அல்லது அவரது தனிப்பட்ட திட்டங்கள் குறித்து ஏலத்தில் அவரை வாங்க போட்டியிட்ட அணிகளுக்குத் தெரியுமா? என்பது குறித்து சோதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஷஸ் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் ஜோஷ் இங்லிஷ் ஐபிஎல் மினி ஏலத்தில் வாங்கப்பட்டது குறித்து பேசியதாவது: அடுத்த ஐபிஎல் சீசன் முழுவதும் என்னால் விளையாட முடியாது. ஏப்ரல் மாதத்தில் எனக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. அதனால், ஐபிஎல் தொடரில் என்னால் முழுவதும் விளையாட முடியாது. என்னை யாரும் ஏலத்தில் எடுக்கமாட்டார்கள் என நினைத்தேன். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உறங்க சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலையில்தான் நான் ஏலத்தில் வாங்கப்பட்டதே எனக்குத் தெரியும் என்றார்.
கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஷ் இங்லிஷ் 11 போட்டிகளில் 278 ரன்கள் எடுத்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 42 பந்துகளில் 73 ரன்களும், குவாலிஃபையர் 2 போட்டியில் 21 பந்துகளில் 38 ரன்களும் எடுத்து பஞ்சாப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கிய பங்கு வகித்தார்.
இருப்பினும், அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் 4 போட்டிகளில் விளையாடுவாரா? தொடர் முழுவதும் விளையாடுவாரா? என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வ புகாரும் அளிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.