இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இலங்கை மகளிரணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (டிசம்பர் 21) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை விஷ்மி குணரத்னே 39 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஹர்ஷிதா மாதவி 21 ரன்களும், ஹாசினி பெரேரா 20 ரன்களும் எடுத்தனர். கேப்டன் சமாரி அத்தப்பத்து 15 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் கிராந்தி கௌட், தீப்தி சர்மா மற்றும் ஸ்ரீ சரணி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்தியா அபார வெற்றி
122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 14.4 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா 25 ரன்களும், ஷஃபாலி வர்மா 9 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 44 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். ஹர்மன்பிரீத் கௌர் 15 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இலங்கை தரப்பில் காவ்யா கவிந்தி மற்றும் இனோகா ரணவீரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.