ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆஷஸ்’ தொடரில் விளையாடி வருகிறது.
முதலிரண்டு போட்டிகளில் அபார வெற்றிபெற்ற ஆஸ்திரேலிய அணி, அடிலெய்டில் நடைபெற்ற மூன்றாவது ஆஷஸ் போட்டியிலும் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் மீதம் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் 3-0 என ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றி ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துள்ளது.
இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் நான்காவது போட்டி இன்று( டிசம்பர் 26) மெல்பர்னில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக ஹெட் மற்றும் ஜேக் வெதரால்டு இருவரும் களம்புகுந்தனர். தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய வீரர்களைத் திணறடித்தார் ஜோஷ் டங். டிராவிஸ் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களில் வெளியேற, ஜேக் வெதரால்டு 10 ரன்கள், லாபுசேன் 6 ரன்கள், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்கள் ஆகியோரின் விக்கெட்டுகளை ஜோஷ் டங் தூக்கினார். இதனால், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளுக்கு 51 ரன்களில் பரிதவிப்புக்குள்ளானது.
அதனைத் தொடர்ந்து கவாஜா 29 ரன்கள் அகிட்சன் பந்து வீச்சிலும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 20 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 17 ரன்களிலும் பெவிலியன் திரும்ப கடைசி கட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நெசர் நிதானமாக விளையாடி 49 பந்துகளில் 7 பௌண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து ஜோஷ் டங்கிடம் வீழ்ந்தார்.
அவரைத் தொடர்ந்து ஸ்டார்க் 1, போலண்ட் டக்- அவுட்டாக, ஜேய் ரிச்சர்ட்சன் மட்டும் களத்தில் இருந்தார். முதல் இன்னின்ஸில் 45.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணித் தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளையும், கஸ் அகிட்சன் 2 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ், ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு மிட்செல் ஸ்டார்க் - நெசர் இருவரும் சேர்ந்து தொடக்கம் முதலே அழுத்தம் கொடுத்தனர்.
ஜாக் க்ராவ்லி 5 ரன்களிலும், டக்கெட் 2 ரன்களிலும் மிட்செல் ஸ்டார்க்கிடம் விக்கெட்டைப் பறிகொடுக்க, பெத்தேல் ஒரு ரன்னிலும், ரூட் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகியும், கேப்டன் ஸ்டோக்ஸ் 16 ரன்களிலும் நெசரிடம் விக்கெட்டை இழந்தனர்.
இங்கிலாந்து அணி 16 ரன்களுக்கு ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததால், 50 ரன்களையாவது தாண்டுமா? என சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து நிதானமாக ஆடிய ஹாரி ப்ரூக் 2 பௌண்டரி, 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியை 50 ரன்களைக் கடக்க வைத்து போலண்ட் பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார். விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 2 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 5 ரன்களிலும் போலண்ட் பந்து வீச்சில் சிக்கினர்.
பந்துவீச்சு மட்டுமின்றி நிதானமாக விளையாடிய மட்டையை சுழற்றிய கஸ் அகிட்சன் 3 பௌண்டரி, ஒரு சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். கார்ஸ் 4 ரன்களில் அவுட்டாக, டங் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.
29.5 ஓவர்கள் முடிவில், இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணித் தரப்பில் அபாரமாக பந்துவீசிய நெசர் 4 விக்கெட்டுகளையும், போலண்ட் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், க்ரீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர், 42 ரன்கள் முன்னிலையுடன் விக்கெட் காப்பாளராக பந்து வீச்சாளர் ஸ்காட் போலண்ட் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் இருவரும் களம்புகுந்தனர். முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில், ஆஸ்திரேலிய அணி ஒரு ஓவர்களில் விக்கெட் இழப்பு 4 ரன்கள் எடுத்துள்ளது. போலண்ட் 4 ரன்களிலும், டிராவிஸ் ஹெட் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.