19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் அனைத்தும் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடத்தப்படுகின்றன.
இந்த நிலையில், இந்த உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (டிசம்பர் 27) அறிவித்தது. 15 பேர் கொண்ட இந்திய அணியை ஆயுஷ் மாத்ரே கேப்டனாக வழிநடத்துகிறார்.
உலகக் கோப்பைத் தொடருக்கான இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தீபேஷ் தேவேந்திரன் மற்றும் ஆர்.எஸ்.அம்பிரிஷ் இடம்பெற்றுள்ளனர். இந்த இரண்டு வீரர்களும் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
வேகப் பந்துவீச்சாளரான தீபேஷ் தேவேந்திரன் அண்மையில் துபையில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.
5 போட்டிகளில் விளையாடிய அவர் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, அந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மலேசியாவுக்கு எதிரான போட்டியில் 22 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
மற்றொரு தமிழக வீரரான ஆர்.எஸ்.அம்பிரிஷ் வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் ஆவார்.
உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு தமிழக வீரர்களுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.