பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகின்றன. சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி என முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. சரியாக விளையாடாததால் பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
புதிதாக கட்டமைக்கும் நேரம்
முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: முன்னாள் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அணி மீது விமர்சனங்களை முன்வைப்பதை பார்க்கிறேன். தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவதால் நாம் ஏன் பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கக் கூடாது? அதனால் எந்த ஒரு கெடுதலும் வந்துவிடப் போவதில்லை. நாம் தோல்வியடைவோம். ஆனால், குறைந்தது புதிதாக ஏதோ ஒன்றை முயற்சித்திருப்போம். அணியில் உள்ள வீரர்கள் நல்ல வீரர்கள் இல்லை என யாரும் கூறவில்லை. ஆனால், யாராக இருந்தாலும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு அணியில் இடம்பெற வேண்டும் என்றே கூறுகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.